Thursday, May 19, 2016

தமிழ்ப் பொழில் (1931-1932) துணர்: 7 - மலர்: 12

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஏழாம் ஆண்டு:  (1931-1932) துணர்: 7  -  மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.


இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஏழாம் ஆண்டு:  (1931-1932)
துணர்: 7  -  மலர்: 12

________________________________________________

1. கரிய அன்னப்பறவை (The Black Swan)
அ. கந்தசாமிப் பிள்ளை
[கச்சியப்ப முனிவரின் பேரூர்ப் புராணத்தில், 'பையரா வகலல்குற் காரன்னம் படர்தலொடும்' என்பது வயலில் கருப்பு அன்னங்கள் புகுதலும், அங்கிருந்த வெள்ளையன்னங்கள் வெளியேறின என்பதைச் சொல்கிறது. இங்குக் கருப்பு அன்னம் என்பது யாரைக் குறிக்கிறது என ஆராய்கிறார் கட்டுரை ஆசிரியர். இப்பாடலுக்கும் முதல் பாடலில் இருந்து பொருள் கொண்டால், அது காரன்னம் என்பது 'கடைசியர்' அல்லது பள்ளர் மகளிர்களையே குறிக்கிறது. எனவே எதற்கு அம்மகளிருக்குக் காரன்னம் என்ற உவமை கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பதை விளக்கும் கட்டுரை. காரன்னம் 1. கருமூக்கு அன்னம், 2. கருங்கழுத்து அன்னம், 3. கறுப்பு அன்னம் என மூவகைப்படும். எனவே காரன்னம் என்பது இல்பொருளன்று; உள்பொருளே என்கிறார்  கந்தசாமிப் பிள்ளை]

2.காளமேகப்புலவரது காலம்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
['ஆசுகவியால் அகிலவுலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்' எனப் புகழப்பட்ட காளமேகப்புலவர் வாழ்ந்த காலத்தினை ஆராயும் முயற்சி. மன்னர் திருமலைராயன் என்பவன் வறுமையில் வாடியத் தனக்குதவியதை காளமேகம் தமது பாடலொன்றில் குறிப்பிடுகிறார்.  இம்மன்னனுக்கு விதரணராமன் என்றொரு பெயரும் உண்டு. முடிகொண்டான் ஆற்றுக்கும் அரிசிலாற்றுக்கும் இடையில் திருமலைராசன் என்ற ஆறு இவனது காலத்தில் வெட்டப்பட்டது.  காரைக்காலுக்கு தெற்கே உள்ள திருமலைராசன் பட்டணமும் இவ்வேந்தன் பெயரால் அமைக்கப்பட்டது. இவனது கல்வெட்டுகள் பாபநாசம், தஞ்சை, திருவானைக்காவல் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இவன் வழங்கிய கொடை பற்றிக் கூறும் தஞ்சைக் கல்வெட்டு தரும் தகவலின்படி இவனது காலம்  கி.பி. 1455 ஆம் ஆண்டு. இவன் விசயநகர மன்னனான மல்லிகார்ச்சுனராயர் விரூபாஷராயர்  பிரதிநிதியாகத் தமிழகத்தில் ஆட்சி புரிந்தவன். எனவே, காளமேகம்  15 ஆம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தவர்]

3. கம்பர் உவமக்கவின்  (தொடர்ச்சி...)
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி ஆண்டு நிறைவு விழாவில் கட்டுரை ஆசிரியரால் நிகழ்த்தப் பெற்ற உரை கட்டுரை வடிவில் தமிழ்ப்பொழிலில் வழங்கப்பட்டுள்ளது. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்புமையாகக்  கூறுவது. கம்பராமாயணத்தில் எடுத்தாளப்பட்ட உவமைகளின் நயத்தினைப் பாராட்டும் ஒரு தொடர் கட்டுரை இது]

4. எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[ 1. பண்டைக்காலத் திருவிழாக்கள் எத்தனை நாட்கள் நடைபெற்றன:  இந்நாட்களில் கோயில் திருவிழாக்கள் 10 நாட்கள் கொண்டாடப்பட்டாலும், மூவேந்தர் ஆண்ட காலங்களில் ஏழு நாட்களே அவை கொண்டாடப்பட்டதாக மூன்று கல்வெட்டுக்கள் தரும் செய்திகளின்படி தெரிகிறது.
2. தெலுங்கு மொழியில் முதலில் செய்யுளும், செய்யுள் நூலும் தோன்றிய காலம்:  குண்டூர் மாவட்ட 'ஆதங்கி' என்ற ஊரில் கிடைக்கும் கல்வெட்டில் தெலுங்கு  செய்யுள் ஒன்று  காணப்படுகிறது. இதில் கி.பி. 845 பற்றிய செய்திகள் உள்ளன, அத்துடன் செய்யுளும் உள்ளது. இதற்கு முந்தைய தெலுங்கு  செய்யுள் எதுவும் இதுவரை கிடைக்காததால், தெலுங்கு செய்யுளின் துவக்கத்தை ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம் எனக் கொள்ளலாம். பதினொன்றாம் நூற்றாண்டில், கீழைச் சாளுக்கிய முதல் இராசராசனின் அவைப்புலவராக இருந்த நன்னயப்பட்டர் என்பவர் மகாபாரதத்தைத்  தெலுங்கு செய்யுள்களாக எழுதினர். எனவே பதினொன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முதல் தெலுங்கு செய்யுள் நூல் எழுதப்பட்டது. 
3. தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய 'சேனாவரையர்' பற்றிய வரலாறு: பாண்டியநாட்டுக் கல்வெட்டு ஒன்றில் மட்டுமே 'சேனாவரையர்' என்றொரு குறிப்புள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு சில பெயர்கள் வழக்கத்தில் இருக்கும் என்பதால் இவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர் எனக் கொள்ளலாம்.
4. ஆண்கள் உடுத்திய உடையும் புடவை என்றே அந்நாளில் குறிப்பிடப்  பட்டது என்பது கல்வெட்டுகள் பலவற்றின் மூலம்  தெரியவரும்  செய்தி, உத்தம சோழன்  செப்பேடு ஒன்றும் இத்தகவலைத் தருகிறது... இது ஒரு தொடர் கட்டுரை] 

5. கல்வி நிலை (தொடர்ச்சி...)
இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[தமிழ்க் கல்வியின் நிலை குறித்து ஆராய முற்படும் ஒரு தொடர் கட்டுரை, மிக விரிவாகக் கல்வி கற்பதன் சிறப்பை எடுத்துரைக்கும் கட்டுரை]

6. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 36 கட்டுரையின் இப்பகுதியிலும்  தொடர்கிறது ... ]

7. ஐயம்
தி. அ. முத்துசாமிக் கோனார்
[" கொங்கு மலை நாடும் குளிர்ந்த நதி பன்னிரண்டும்
சங்கரனார் தெய்வத் தலம் ஏழும்  - பங்கயம் சேர்
வஞ்சி நகர் நாலும் வளமையாய் ஆண்டருளும்
கஞ்சமலர்க் கையுடையோன் காண்"
என்ற பாடலுக்கு பொருள் வேண்டுகிறார் தி. அ. முத்துசாமிக் கோனார்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment