Tuesday, November 15, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 11

வணக்கம்.

துணர்: 12 - மலர்: 11  (1936-1937) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)   துணர்: 12 - மலர்: 11
________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
1. பழைய பாடற்றிரட்டு
2. கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...)
3. திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு  (தொடர்ச்சி ...)
4. ஒரு போலியுரை மறுப்பு
5. நன்னனும் பரணரும்
6. நூல் மதிப்புரை
7. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

வாசிக்க இங்கே செல்க!


நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...

1. பழைய பாடற்றிரட்டு
L. உலகநாதப் பிள்ளை
[வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட  50  வெண்பா பாடல்களின் திரட்டு.  பாடல்கள் சில  சோழ நாட்டுப் பின்புலம் கொண்டவையாகவும், கடவுளரைக் குறிக்கும் பாடல்களாகவும் உள்ளன. திருச்சியைக் குறித்த பாடல்களும் (31, 32) உள்ளன.

என்னசனி ஞாயிறுபோ யித்திங்கள் வந்துதித்தால்
மின்னியசெவ் வாய்மின் மெலிவளே - உன்னரிய
மன்னுமத னம்புதனால் வாய்த்தவி யாழம் படைத்தாள்
அன்னையெதிர் வெள்ளியா னாள்
[19]
என்ற பாடல் வாரத்தின் கிழமைகளையும் பெண்ணையும் இணைத்த இரட்டுற மொழிதல் பாடல் போன்றுள்ளது (தெரிந்தவர் பொருள் விளக்கம் தருக)]

2.  கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்மஐயங்கார்
[கல்லாடர் என்னும் புலவரால் இயற்றப்பட்ட  கல்லாடம் என்ற கோவை நூலில், சிவனின் 64 திருவிளையாடல்களில் 34னைக்  கொண்டு சிவன் புகழ் பாடப்படுகிறது . திருவிளையாடல் புராணக் கதைகளைக் குறித்து விரிவான தமிழிலக்கிய ஆராய்ச்சியை முன் வைக்கிறார் நரசிம்மஐயங்கார்.  கட்டுரையின் இப்பகுதியில், மாணிக்க வாசகர் (சம்பந்தர் போன்று) சிவதலங்களை தொகுக்கும் தொகை நூலாகவும்,(சுந்தரர் போன்று)  சிவனடியார்களின் தொகையைக் கூறும் வகையில்  தம் பாடல்களை எழுத முயலவில்லை என்கிறார் கட்டுரை ஆசிரியர். மேலும் மறைமலையடிகள் குறிக்கும் மாணிக்கவாசகர், அவரது திருப்பெருந்துறைக் கோவில்  காலவாராய்ச்சியின் பிழைகளையும் காட்டுகிறார்.]

3. திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு  (தொடர்ச்சி ...)
வே. மு. சீனிவாச முதலியார்
[மாணிக்கவாசகர்  அருளிய திருவாசகத்தின்  "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்ற பாடல் 'அகவற்பா' வகையில் (கலிவெண்பா அல்ல)  அடங்கும் எனக் குறிப்பிட்டு இப்பாடலின் சரியான பொருளைக் காணும் ஆய்வினைத் தொடருகிறார்  வே. மு. சீனிவாச முதலியார் . இந்த ஆய்வுக்கட்டுரை  ஒரு தொடர் கட்டுரை]

4. ஒரு போலியுரை மறுப்பு
அ. கந்தசாமி பிள்ளை
[மதுரை தமிழ்ச் சங்கத்தின் "செந்தமிழ்" இதழில் வெளியான "திருவள்ளுவர் காலம்" என்ற ஆர். நரசிம்ஹன் எழுதிய கட்டுரையின் மீது மதிப்புரை வழங்குகிறார் அ. கந்தசாமி பிள்ளை.   மணிமேகலையும் திருக்குறளும் என்ற இருநூல்களையும்  ஒப்பிட்டு,  திருவள்ளுவர் காலத்தையும் மணிமேகலையின் காலத்தையும் பிற்படுத்தும் நோக்கத்தில் ஆர். நரசிம்ஹன் வைப்பது ஒரு  விதண்டாவாதம்.  "பொய்யில் புலவன்" என்பது திருத்தொண்டத் தொகையில் வரும் "பொய்யடிமையில்லாத புலவரை" குறிக்கிறது என்றும்;  "தெய்வம் தொழாள்" என்று மணிமேகலையின் 22 ஆம் காதையில் வரும் குறிப்பு திருக்குறளில் வரும் குறளைக் குறிக்கவில்லை.  அது ஏதோ  ஒரு புலவரின் பாடல், கடல்கோளில் அழிந்து போன நூலின் பாடலாகும் என்றும் கூறுவதை மறுக்கிறார் அ. கந்தசாமி பிள்ளை. ஆர். நரசிம்ஹன் அவர்களின் நோக்கம் யாதெனில், தெளிவாகத் தெரியும் சான்றுகளை நடுவுநிலையற்ற நிலைப்பாடு கொண்டு  மறுத்து,  மணிமேகலை, திருக்குறள் ஆகிய இரண்டு நூல்களின் காலத்தையும் பின்தள்ளும் முயற்சி என்று விளக்கியுரைக்கிறார்.]

5. நன்னனும் பரணரும்
ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
[நன்னன் என்பவன், சேரன் செங்குட்டுவன்  காலத்திற்குச் சற்றே பிற்காலத்தில், சேரநாட்டின் ஒரு  குறுநிலப்பகுதியான கொங்குப் பகுதியை  ஆட்சி செய்த வேளிர் குல மன்னன். இவன்  மிகுந்த  வீரமும்  கொண்டவன், இவனது வீரப்புகழுக்கு, சிறந்த போர்த்திறம் கொண்டிருந்த இவனது  படைவீரன்  மிஞிலியும் ஒரு காரணம். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்ற சேரமன்னனுக்கும் நன்னனுக்கும் வாகைப் பெருந்துறை என்ற இடத்தில் நடந்த  போரின் போது  நன்னனின் நாடும், உயிரும் அவனைவிட்டுப் பிரிந்தது. 

மேலும்  இவன் குறித்த செய்தி; ஆற்றில் மிதந்து வந்த இவனுக்குரிய தோட்டத்து மாங்கனியொன்றை ஒரு பெண் உண்டுவிட்டாள்.  அப்பெண்ணின் தந்தை அதற்கு ஈடாகப் பெருஞ்செல்வம் கொடுப்பதாகக் கூறியும் நன்னன் ஏற்காது அப்பெண்ணைக் கொன்றொழித்தான்.  ஆதலால் 'பெண்கொலை புரிந்த நன்னன்' என்ற தீராப்பழியையும் வரலாற்றில் பெற்றான். தன்னை நாடி வந்த ஒளவையை பரிசில் தராது அவமதித்து அவரது வெறுப்பையும் பெற்றான்.  இவனது வரலாற்றை அறிவதற்கு அகநானூற்றில் பரணர் நன்னன் குறித்து பாடிய   14 பாடல்கள் மூலம் அறியலாம் எனக் கூறி அப்பாடல்களில் இவன் குறித்துக் காணும் செய்திகளைத் தொகுத்தளிக்கிறார்  ஔவை சு. துரைசாமிப்பிள்ளை  அவர்கள். இக்கட்டுரை எழுதப்பட்ட காலத்தில் பல அகநானூற்றுப் பாடல்களுக்கு உரை எழுதப்பெறவில்லை எனவும் தெரிகிறது. இது ஒரு தொடர் கட்டுரை. ] 

6.  நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[தெலுங்கு மொழியில் வழங்கும் 'சுமதி சதகம்' என்ற நீதி நூலினை,  "நன்மதிமாலை" என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார் ஐ. நடேசபிள்ளை. இந்த அறநூல் தமிழன்பர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகின்றது. ]

7. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.
________________________________________________