Thursday, October 27, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 10

_________________________________________________________

1. கல்லாட நூலாராய்ச்சி (தொடர்ச்சி ...)
E.R. நரசிம்மஐயங்கார்
[எழுதிய ஆசிரியரால்  பெயர் பெற்ற நூல்களுள் ஒன்று 'கல்லாடம்', கல்லாடர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.  இப்பெயர் கொண்ட புலவர்  பலர் உள்ளனர்.   கல்லாடம் ஒரு கோவை நூல், சிவனின் 64 திருவிளையாடல்களில் 34னைக்  கொண்டு சிவன் புகழ் பாடும் நூல் இது. நம்பியாண்டார் நம்பியின் கருத்தை நிலைநாட்ட எழுந்த நூலென்ற கருத்து அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னர், 11 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர்  கல்லாடம் எழுதப்பட்டது எனவும் கருதலாம் எனக் கூறும் நரசிம்மஐயங்கார் திருவிளையாடல் புராணக் கதைகளைக் குறித்து விரிவான தமிழிலக்கிய ஆராய்ச்சியை முன் வைக்கிறார்.

►► கட்டுரையின் இப்பகுதியில், தருமிக்குப் பொற்கிழி வழங்கிய கதை எவ்வாறு புலவர்களின் கற்பனையால் உருவாக்கப்பட்டது, நக்கீரர் என்ற புனைபெயரில் பாடல்கள் எழுதப்பட்டது, கொங்குதேர் வாழ்க்கை  என்ற பாடல் இக்கதையுடன் இணைக்கப்பட்டது என்பதையும்; பாண்டியன் உக்கிரப்பெருவழுதி குறித்தும் மூர்த்திநாயனார் குறித்தும் கூறும்  புராணக் கதைகள் யாவும் 8 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை எனச்  சான்றுகளுடன் விளக்குகிறார்.  இவற்றை எழுதிய  புலவர் கூறும் "நால்வகை இலக்கணம் நலத்தகு மொழிந்தனை"  என்ற இலக்கணக்குறிப்பானது  பாடல்கள் எழுதப்பட்ட காலத்தை  உறுதி செய்கிறது என்று நிறுவுகிறார் நரசிம்மஐயங்கார் ]

2. நற்றிணை  (தொடர்ச்சி ...)
ச. தண்டபாணி தேசிகன்
[ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நிலத்தின் இயல்பை விளக்கும் 'நற்றிணை' என்ற தொகை நூலின் பெயர்க்காரணம், நூலமைப்பு ஆகியவற்றை விளக்குகிறார்  தண்டபாணி தேசிகர். அகநானூறு, புறநானூறு, ஐந்குறுநூறு, குறுந்தொகை ஆகியவற்றின் கடவுள்வாழ்த்துப் பாடல்களில்  சிவனை வாழ்த்திப் பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்', நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை மட்டும் திருமாலை வாழ்த்துவதாக அமைத்ததன் காரணம் ஆராயப்படவேண்டிய ஒன்றாகக் கருதுகிறார்.

►► கட்டுரையின் இப்பகுதியில், நற்றிணை குறிக்கும் தாவரங்கள், விலங்குகள் குறித்தும், அவற்றின் பண்பென குறிக்கப்படுபவை குறித்தும் தொகுத்து வழங்குகிறார் ச. தண்டபாணி தேசிகன் ]

3. தமிழ்க் கவிச் சுவை
வி. குமாரசாமி ஐயர்
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், மதுரை மாவட்டத்தின் மேலூர் பகுதியில் வசித்த  தமிழ்ப்புலமை வாய்ந்த  தங்கப்புலவர் என்றழைக்கப்பட்ட இஸ்லாமியப் புலவர் ஒருவரைக்  குறித்த உண்மைக் கதை. இவரது புலமை பலரைக் கவர்ந்தது என்றும், மதுரைக்குச் சென்ற ஒரு வண்டிப்பயணத்தில் எவ்வாறு இப்புலவர் இலக்கிய விருந்தளித்து தன்னுடன் பயணம் செய்த பயணிகளை மகிழ்வித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.]

4. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார்.  

►► கட்டுரையின் இப்பகுதியில், 'இரவுக்குறியும் மறுத்து தோழி வரைவு கடாவியது' என்பது  குறித்த  ‘‘யாயே, கண்ணினுங் கடுங்கா தலளே யெந்தையு’’(அகநானூறு - 12) என்ற கபிலர் பாடிய குறிஞ்சித் திணைப்பாடலுக்கு,  இக்கட்டுரையில் விளக்கம் தருகிறார்.   இது ஒரு தொடர் கட்டுரை]

5. திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு
வே. மு. சீனிவாச முதலியார்
[ மாணிக்கவாசகர்  அருளிய திருவாசகத்தின்  "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்ற பாடல் 'அகவற்பா' வகையில் (கலிவெண்பா அல்ல)  அடங்கும் எனக் குறிப்பிட்டு இப்பாடலின் சரியான பொருளைக் காணும் ஆய்வினைத் தொடங்குகிறார் வே. மு. சீனிவாச முதலியார் .  கோகழி என்பது திருக்காழியைக் குறிக்கும், திருப்பெருந்துறையை அல்ல என்றும் மிக விரிவான  பொருள் விளக்கம் தருகிறார்.  இந்த ஆய்வுக்கட்டுரை  ஒரு தொடர் கட்டுரை]

6. வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி  - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதியமானின் கதைக்கு நாடக வடிவம்  கொடுத்துள்ளார்  சிவ. குப்புசாமிப் பிள்ளை...நாடகம்  தொடர்கிறது ]

7. நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[சென்னைப் பல்கலைக்கழகத்தின்  வெளியீடான, திருநெல்வேலியில் வாழ்ந்த  கவிராயர் முத்துசாமிப்பிள்ளை  அவர்கள் இயற்றிய "நாநார்த்ததீபிகை" என்ற நிகண்டிற்கும்;
வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றிய  திருக்கோவலூர் K. கோதண்டபாணி பிள்ளை இயற்றிய "பங்கயச்செல்வி அல்லது வீரக்காதல்"    என்ற துன்பியல் நாடக நூலிற்கும்;
அண்ணாமலைப்பல்கலைக்கழகப் பேராசிரியரான நவநீதக்கிருஷ்ணன் அவர்களால்,  'பேடன் பௌவல்' எழுதிய 'ரோவரிங் டு சக்சஸ்' என்று சாரண இயக்கத்தைக் குறித்த ஆங்கில  நூல்,    தமிழில்  'திரிசாரணீயம்' என்று  மொழியாக்கம்  செய்யப்பட்ட நூலிற்கும் ;
மதிப்புரை வழங்கி  அவற்றைப்  படித்துப் பயன் பெறுமாறு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, October 12, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 9

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 9
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 9

_________________________________________________________

1. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது குறித்த   ‘‘வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம்  நெருப்பெனச் சிவந்த’’(அகநானூறு - 11) என்ற ஔவையார் பாடிய பாலைத் திணைப்பாடலுக்கு,  இக்கட்டுரையில் விளக்கம் தருகிறார்.   இது ஒரு தொடர் கட்டுரை]

2. கல்லாட நூலாராய்ச்சி
E.R. நரசிம்மஐயங்கார்
[எழுதிய ஆசிரியரால்  பெயர் பெற்ற நூல்களுள் ஒன்று 'கல்லாடம்', கல்லாடர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.  இப்பெயர் கொண்ட புலவர்  பலர் உள்ளனர்.   கல்லாடம் ஒரு கோவை நூல், சிவனின் 64 திருவிளையாடல்களில் 34னைக்  கொண்டு சிவன் புகழ் பாடும் நூல் இது. நம்பியாண்டார் நம்பியின் கருத்தை நிலைநாட்ட எழுந்த நூலென்ற கருத்து அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னர் 11 ஆம் நூற்றாண்டு போல கல்லாடம் எழுதப்பட்டது எனவும் கருதலாம் எனக் கூறும் நரசிம்மஐயங்கார் திருவிளையாடல் புராணக் கதைகளைக் குறித்து விரிவான தமிழிலக்கிய ஆராய்ச்சியை முன் வைக்கிறார்.]

3. பழைய பாடற்றிரட்டு
L. உலகநாதப்பிள்ளை
[தஞ்சை சரஸ்வதி மகால் சுவடி நூலகத்தில் உள்ள,  பல பாடல்தொகுப்பு  நூல்களில் இருந்து திரட்டப்பட்ட, இதுவரை வெளிவராத பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார் L. உலகநாதப்பிள்ளை]

4. வள்ளல் அதியமான் நெடுமானஞ்சி  - நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதியமானின் கதைக்கு நாடக வடிவம்  கொடுத்துள்ளார்  சிவ. குப்புசாமிப் பிள்ளை]

5. நூல் மதிப்புரை
இதழாசிரியர்
[நவம்பர் 1936 முதல் கும்பகோணத்தில் இருந்து, சாதி சமயக் கோட்பாடுகளால் நிகழும் சமூக சீர்குலைவை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில்  எளிய தமிழில் வெளியிடப்பட்ட "அறிவுக்கொடி" என்ற சமூகசீர்திருத்த  மாதஇதழ் பாராட்டப்படுகிறது, அதனைப் படித்துப் பயன் பெறுமாறு வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.]

6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, October 1, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 8

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 8

_________________________________________________________

1. கருவிலே வாய்த்த திரு (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[ 'கருவிலேயே வாய்க்கப்பட்ட திரு'  என்ற பண்பாக, பறவைகள் தங்களுக்கு சிறந்த வகையில் அமைந்த ஐம்புலன்களைக் கொண்டு இடர்களை முன்கூட்டியே அறியும் திறனைக்  கொண்டிருக்கின்றன.  பறவைகள் ஓய்வெடுக்காது  தொலைதூரத்தில் உள்ள இடங்களுக்கு, கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றின் திசையறியும், காலமறியும் திறனும் இன்றும் ஆய்வாளர்களை வியக்க வைக்கும் வண்ணமே அமைந்துள்ளன  என  ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் கருதுகிறார்கள்.  பறவைகளிடம் இயற்கையில் அமையப் பெற்ற நுண்ணறிவுத் திறன் கொண்ட செயல்கள் அவற்றின் "கருவிலே வாய்த்த திரு" சுட்டிக்  காட்டி விளக்குகிறார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. காலவாராய்ச்சி (தொடர்ச்சி ...)
ம.வி. இராகவன்
[IV. தமிழ்ப்பொழிலில் முன்னர்  வெளியான, E.R. நரசிம்மையங்கார் அவர்களின் "உரையாசிரியர் ஒருவர், பேராசிரியர் பலர்" என்ற தொல்காப்பியம் தொடர்பான கட்டுரையை மீள்பார்வை செய்து மதிப்புரை அளிக்கிறார் ம.வி. இராகவன். நரசிம்மையங்கார்  அவர்களது கட்டுரை  சீரிய ஆய்வுநெறிகளைப் பின்பற்றவில்லை எனக்குறிப்பிட்டு, தனது கோணத்தை விளக்க மேலும் பல எடுத்துக் காட்டுகளைக் கொடுத்து, தக்கச் சான்றுகள் காட்டாத ஆய்வுநெறி, "புற்கயிற்றாற் களிறு பிணிக்க முயல்வதற்கு  ஒப்பாகும்" ,  உண்மையைக் கண்டறிய இயலாவண்ணம் மயக்கம் தரும் என்று சுட்டிக் காட்டுகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
முத்து சு. மாணிக்கவாசக முதலியார்
[சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது குறித்த   ‘‘வான்கடற் பரப்பிற் றூவற் கெதிரிய, மீன்கண்டன்ன மெல்லரும் பூழ்த்த, முடவுமுதிர் புன்னை’’(அகநா.10) என்ற அம்மூவனார் பாடிய நெய்தல் திணைப்பாடலுக்கு,  இக்கட்டுரையில் விளக்கம் தருகிறார்.   இது ஒரு தொடர் கட்டுரை]

4. எண்ணெய்யும் தண்ணீரும்
அ. சிதம்பரநாதஞ் செட்டியார்
[மொழியிலக்கண நியதியில் ஒன்றாகிய 'பொருள் விரிதல்' நியதி அடிப்படையில், எண்ணெய்யும் (எள் +  நெய்) தண்ணீரும் (தண்  + நீர்) பொதுவாக எல்லா நெய்யையும் (வேப்பெண்ணெய், மண்ணெண்ணெய்);  எல்லா நீரையும் (சுடு தண்ணீர், தேத்தண்ணீர்)  குறிக்கப்படுகின்றது என்று விளக்கும்  சிதம்பரநாதஞ் செட்டியார், தமிழிலக்கியங்களில் இவ்விரு  சொற்களும் பற்பலவிதங்களில் கையாளப்படுவதை எடுத்துக்காட்டி விளக்குகிறார்]

5. எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[ 1. பண்டைக்காலத் திருவிழாக்கள் எத்தனை நாட்கள் நடைபெற்றன; 2. தெலுங்கு மொழியில் முதலில் செய்யுளும், செய்யுள் நூலும் தோன்றிய காலம்;   3. தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய 'சேனாவரையர்' பற்றிய வரலாறு; 4. ஆண்கள் உடுத்திய உடையும் புடவை என்றே அந்நாளில் குறிப்பிடப்  பட்டது;  போன்ற தகவல்களை  தனது ஆராய்ச்சியின் மூலம்  கண்டறிந்து அறிவித்த சதாசிவப் பண்டாரத்தார் தொடர்ந்து ...

5. கொல்லம் ஆண்டின் வரலாறு:  சகஆண்டு, கலியாண்டு என ஆண்டு கணக்கிடும் பழைய  முறை நம்நாட்டில்  முன்னர் வழக்கத்தில் இருந்தது போல; மலையாள மண்ணில் 'கொல்லம் ஆண்டு' எனக் கணக்கிடும் முறையும் இருந்து வந்தது, இன்றும்  அம்முறையைப் பயன்படுத்துபவரும் உண்டு.   இவ்வாறாகக் கொல்லம் ஆண்டு அடிப்படையில் கணக்கிடும் முறை பொது ஆண்டு 825 இல், சேரமான் பெருமான் நாயனாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் கைலாயம் சென்ற ஆண்டு முதற்கொண்டு துவக்கப்பட்ட ஒரு  கணக்கிடும் முறை எனக் கருதப்பட்டு வந்தது.  கல்வெட்டுகள் தரும் தகவல்கள் அடிப்படையில் செய்யப்பட மறு ஆய்வு வழியாக,  புதிய 'கொல்லம்' நகர் அமைக்கப்பட்டது  முதல்  இவ்வழக்கம் தொடங்கிற்று எனத் தெரிய வருகிறது. பொது ஆண்டு 822 இல் நிகழ்ந்த கடல் கோளால் பழைய கொல்லம் அழிந்து 825 இல் புதிய கொல்லம் நகர் உருவானது முதல் 'கொல்லம் ஆண்டு' முறை வழக்கத்திற்கு வந்துள்ளது என  சிதம்பரனார் கொடுத்த  குறிப்பு ஒன்றின்  அடிப்படையில்  தெளிவுபடுத்துகிறார் சதாசிவப் பண்டாரத்தார். சேரமான் பெருமாள் கைலாயம் சென்றது எட்டாம் நூற்றாண்டின் துவக்கம் என்பதால் அது  கல்வெட்டுத் தகவலில் இருந்து மாறுபடுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

6. ஒரு பழைய வழக்கம்: வழக்கத்தில் இருந்த  'மகாராஜராஜஸ்ரீ'என இயற்பெயருக்கு முன்னர் குறிப்பிடும் வழக்கத்தைத் தவிர்த்து கரந்தைத் தமிழ்ச் சங்கம் 'திருவாளர்'  என முதலில் எழுதத் தொடங்கி, அதனை வழக்கத்திற்குக் கொண்டு வந்து தமிழ்ப்பண்பாட்டைக் கடைப்பிடிக்கிறது.  இது போன்றே அன்றைய கல்வெட்டுகளில் 'திருவாளன்', 'திருவுடையான்', 'திருவன்' முதலிய சொற்கள் வழக்கத்தில் இருந்ததைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன என்கிறார் சதாசிவப் பண்டாரத்தார்.

7. காயம்: இக்காலத்தில் காயம் என்பது 'பெருங்காயம்' என்பதைக் குறிக்கிறது.  "படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்" என்ற குறளுக்கு விளக்கம் தரும்  பரிமேல் அழகர், இனிய சுவையைக் கொடுக்கும் காயங்களைக் கொண்டு சுவையூட்டப்பெற்ற உணவு என்று விளக்கம் அளிக்கிறார். அவர்   "காயங்கள்" எனப்  பன்மையில் குறிப்பிடுகிறார்.  திருச்செந்தூர் கல்வெட்டு  ஒன்று காயங்கள் ஐந்து வகைப்படும் எனவும் அவை; மிளகு, சீரகம், மஞ்சள், சிறுகடுகு, கொத்தமல்லி என்றும் புலப்படுத்துகிறது எனக் குறிப்பிடுகிறார்   சதாசிவப் பண்டாரத்தார்.

8.பழைய காலத்தில் பெருநகராக இருந்த ஊர் ஒன்றின் கோயில், பிற்காலத்தில் அது சூழ்ந்த இடங்களுடன் தனி ஊராக அறியப்படும் நிலை உருவாகும் என்பதற்கு திருவாடுதுறை ஓர் எடுத்துக்காட்டு.  திருவாடுதுறை என்னும் கோயில் சாத்தனூர் என்ற ஊரில் அமைந்த கோயில் என திருவாடுதுறை  கல்வெட்டு ஒன்று கூறுகிறது.  இக்குறிப்பு  திருவிசைப்பாவில் திருவாடுதுறைப் பதிகத்தின்  பாடலொன்றிலும் காணப்பெறுகிறது. சாத்தனூரும் திருவாடுதுறையும் இன்று தனித்தனி ஊர்களாக அறியப்படுகின்றன. இதற்கு அக்காலச் சோழர் தலைநகர் பழையாறை நகரையும் எடுத்துக்காட்டாகக்  காட்டலாம்; அன்றைய  பழையாறையின் பட்டீச்வரம், திருச்சத்திமுற்றம்  ஆலயங்களும் இந்நாளில் தனித்தனி ஊர்களாக அமைந்துள்ளன, பழையாறை இந்நாளில் சிற்றூராக மாறிவிட்டது என்கிறார் சதாசிவப் பண்டாரத்தார்]

6. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் J.S. பொன்னையா  அவர்கள், தமது ஆராய்ச்சியின் விளைவாக  தாம் அறிந்தவற்றை,   'பொருளாதார நூல்', 'நாணயமாற்று', 'நாணயம்', 'இந்தியாவின் கிராமப்பொருள்நிலை', 'கிராமச் சீரமைப்பு' ஆகிய பொருளியல் நூல்களாக  எளியத் தமிழ் நடையில் எழுதி, அவற்றில்  பொருளாதாரக் கொள்கைகளை விளக்கும் அருஞ்செயலுக்காகப்   பாராட்டப்பட்டுள்ளார். 

7. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]