Tuesday, June 28, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 5

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 5

_________________________________________________________

1. திருப்பூந்துருத்தி சிவன்கோயில் கல்வெட்டுக்கள்
வை. சுந்தரேச வாண்டையார்
[திருப்பூந்துருத்தி, தஞ்சைக்கு வடக்கே குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ள சிற்றூர்.  அப்பரால் பாடப்பெற்ற பழமையான சிவன்கோவில் உள்ள தலம்.  இக்கோவிலில் உள்ள  சுமார் 30 கல்வெட்டுக்கள் தென்னிந்தியக் கல்வெட்டுப் புத்தகத்தில் வெளிவந்துள்ளன. அந்த நூலில் இடம்பெறாத 2 கல்வெட்டுக்களைப் படிஎடுத்து வந்து தமிழ்ப்பொழிலில் அனைவருக்கும் பயனளிக்கும் வண்ணம் பகிர்ந்து கொள்கிறார் சுந்தரேச வாண்டையார்.
இக்கல்வெட்டுக்கள் முதலாம் பராந்தக சோழன் (கி.பி.907-948) காலத்தியவை. இக்கல்வெட்டுக்களில் ஊரின் பெயர் 'திருத்துருத்தி' என்றே பொறிக்கப் பட்டுள்ளது. பிற்காலத்தில் பாண்டிய  மன்னன் கல்வெட்டிலேயே இவ்வூர் 'திருப்பூந்துருத்தி' என அழைக்கப்படுகிறது.  நற்றிணை, குறுந்தொகை ஆகிய சங்க நூல்களில் குறிப்பிடப்படும்  'அழிசி'  என்ற வள்ளல் வாழ்ந்த  ஊராகவும், பிற்கால சோழர்களின் ஆர்க்காட்டு கூற்றத்திற்குத்  தலைமை இடமாகவும் அமைந்திருந்த திருப்பூந்துருத்தி இக்காலத்தில் ஒரு சிறு கிராமம் ஆக விளங்குகிறது.
குறிப்பு: தஞ்சை மயிலாடுதுறை அருகே, காவிரியின் தென்கரையில்  மற்றொரு 'திருத்துருத்தி'   என்ற ஊரும் உள்ளது. அதுவும் அப்பரால் தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலமே]

2. கம்பர் பாராட்டிய பழந்தமிழ் நூல்கள் (தொடர்ச்சி ...)
ஆ. சிவசுப்பிரமணியன்
[கல்வியிற் பெரியார் கம்பர் தமது பாடல்களில் எடுத்தாண்ட பழந்தமிழ்நூல் கருத்துக்கள் குறித்து தொகுத்தளிக்கும் கட்டுரையை  வழங்குகிறார் சிவசுப்பிரமணியன். கம்பர் தமது பாடல்களில் பாராட்டிய நூல்கள் திருக்குறளும், சங்கக் காப்பியங்களும், கொங்கு வேளிர் செய்த உதயணன் கதையுமாகும் எனக் குறிப்பிடும்  ஆசிரியர் கட்டுரையின் இப்பகுதியில் கம்பர் பயன் படுத்திய திருக்குறள் மற்றும் சங்கக் காப்பியக் கருத்துக்களை வழங்குகிறார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

3. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார்.
இப்பகுதியில்; வரருசியார் பாணினி போல அறிவுத்திறம் பெறவிரும்பி தவம் மேற்கொள்ளச் சென்றுவிட,  அவரது மனைவி  உபகோசையின் அறிவுத்திறம் பற்றிய கதை கூறப்பட்டுள்ளது.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. நயன நூல் நவநீதம் (தொடர்ச்சி ...)
S. அமிர்தலிங்கம் பிள்ளை
[ஐம்பொறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கண் குறித்த கட்டுரை: கண்ணின் அமைப்பு, தொழில் என உயிரியல் அடிப்படை கொண்ட விளக்கங்களுடன் விழிகள் குறித்த ஒரு  விரிவான விளக்கக் கட்டுரை.
கட்டுரையின் இப்பகுதியில்; கண்ணைப் பராமரிக்கும் முறை குறித்த தகவல் தொடர்கிறது. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[3 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, ஆராய்ச்சி முறையாக வகுத்தல், பெயரீடு, அளவைப் பிரித்தல், பிரித்தலுக்கும் வகுத்தலுக்கும் உள்ள வேற்றுமை, மாறுகோட்  பிரித்தல்  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

6. சகுந்தலை கதை  (தொடர்ச்சி ...)
கோ. வைத்தியலிங்கம் பிள்ளை
[சகுந்தலை துஷ்யந்தன் கதை!   உரைநடையும், இடையிடையே பாடல்களாகவும் அமைந்த பதிவு. கட்டுரையின்  இப்பகுதியில், துருவாச முனிவரின் வருகையை அறியாத அளவிற்கு துஷ்யந்தனின் நினைவில்  மூழ்கியிருந்த சகுந்தலை முனிவரால் சபிக்கப்படும் காட்சி இடம் பெறுகிறது.  இக்கட்டுரை தொடர்கிறது]

7. மதிப்புரை
இதழாசிரியர்
[அமெரிக்கன் கல்லூரியின்  'பொலிடிகல் எக்கானமி' பேராசிரியர் J.S. பொன்னையா அவர்கள் தமிழில் எழுதிய "இந்தியாவின் கிராமப் பொருள் நிலை'", "நாணயம்", "நாணயமாற்று"  ஆகிய மூன்று நூல்களுக்காகவும் பெரிதும் பாராட்டப்படுகிறார்.  தமிழ்வழி பயிற்றுவிக்கும் பாடநூல்களாக இந்நூல்கள் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற பரிந்துரை  கொடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்த, கிமு 320 களில் வாழ்ந்த  கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலின் நூலைத் தமிழில் "யவனமஞ்சரி" என மொழி பெயர்த்து வெளியிட்ட யாழ்ப்பாணத்து தா. இராமநாத பிள்ளை அவர்களின் தமிழ்த் தொண்டு பாராட்டப்பட்டுள்ளது]

8.தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[சென்ற இதழில் வெளியான 'ஏறு தழுவுதல்' (தொழுமாடு பிடித்தல்) என்ற V.S. குழந்தைசாமி அவர்களின் கட்டுரை, முன்னர் தமிழ்ப்பொழில் இதழாசிரியராகப் பணியாற்றிய R. வேங்கடாசலம் பிள்ளை அவர்கள் தமிழ்ப்பொழிலில் எழுதிய  கட்டுரையின் நகல் என்று அறியப்பட்டதாகவும்,  இவ்வாறு ஒருவர் படி எடுத்து அனுப்புவார் என்று எதிர்பார்க்காததால் அதனை வெளியிட நேர்ந்த பிழைக்கு  இதழாசிரியர் வருத்தம் தெரிவிக்கின்றார்.
இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின்
 பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி நவிலல்.
சென்னைப் பல்கலைக்கழகம் மறைமலையடிகளின் 'அறிவுரைக்கொத்து' என்ற நூலைப் பாடநூலாகத் தேர்வுசெய்தமைக்கு பல்கலைக்  கழகத்திற்குப்  பாராட்டுகளும்; தேர்வுக்குழு பாடநூலாக அறிவித்த நூலுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களுக்குக் கண்டனமும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் மறைமலையடிகளின் நூலுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.
கரந்தைக் கல்லூரியில் ஊதியமின்றி தன்னார்வத் தொண்டராக ஆசிரியப் பணியேற்ற பணி ஓய்வு பெற்ற செங்கரையூர் அ. பொன்னண்ணா களத்தில் வென்றார் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் கூறப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment