Thursday, June 16, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 5

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 5

_________________________________________________________

1. கருதலளவைப் பகுதி I  (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[முதல் அதிகாரம்:  மாறுபட்ட பொருள் தரும் எதிர்ப்பதங்கள்; அளவை நூலில் சிலேடை மற்றும்  இரட்டுற மொழிதல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்,  எவற்றையும் அதைக் குறிக்கும் தனிப்பெயர் கொண்டு குறிப்பிட வேண்டும், பொருள் விரியும் பதங்கள், குணம் விரியாத பதங்கள், சிந்தனை நியமங்கள், நிலையியல் நியமம், மறுதலை நியமம் ஆகிய கருதலளவைக் கல்விக் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகளுடன் இந்த  அதிகாரத்தில் விளக்கப்படுகின்றன]

2. தம்பிரான் தோழர் தேவாரம்   (தொடர்ச்சி ...)
அ. சிதம்பரனார்
[இ. மு. சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இதே தலைப்பில் முன்னர் வெளியிட்ட (துணர் - 9) கட்டுரையில் ...  வேட்டுவ வடிவம் கொண்டு பன்றியைத் தொடர்ந்து கொன்று, அர்ச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதம் நல்கினார் சிவபெருமான்; இதனை உடனிருந்து கண்டவர் சுந்தரர் எனக் குறிப்பிட்டார்.
வரலாற்று அடிப்படையில் அர்ச்சுனன் காலத்திற்கும் சுந்தரர் காலத்திற்கும் உள்ள இடைவெளி 2800 ஆண்டுகள், எனவே சுந்தரர் சிவன் அர்ச்சுனனுக்கு அருளியதை நேரில் கண்டிருக்க  வாய்ப்பில்லையெனச் சுட்டிக்காட்டி மறுத்தார்  சிதம்பரனார்.
அதற்கு, தனது முற்பிறவியின் பழைய நினைவுகளைத்தான்  சுந்தரர் பாடினார் என்பது ஒரு தொன்மம், பாடலின்படி அது சரியே  என சுப்பிரமணியபிள்ளை மறு விளக்கமளித்தார்.
சரித்திர ஆராய்ச்சி என்ற கோணத்தில் நாயன்மார் புராணக் கதைகளை  அணுக விரும்பினால் பெரிய புராணத்தை  மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.   பிறர் எழுதிய கதைகள் தேவார நிகழ்ச்சிகளைச்  சொன்னாலும் அவை சரித்திர ஒழுங்கு, கால ஒழுங்கு அற்றவை என்றும்; சுந்தரர் கொங்கு நாட்டிற்குப் பயணம் செய்தது மூன்று முறை எனவும்  சிதம்பரனார்  தனது கோணத்தை விளக்குகிறார். மேலும், சூரபதுமன் காலம் 78,000 B.C.  என்றொரு தகவலும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது]

3. இலக்கணமும் இலக்கியமும்
சுவாமி ஞானப்பிரகாசர்
[இக்கட்டுரை; முன்னர்  துணர்: 10 - மலர்: 2 இதழில்  ஞா. தேவநேயப்பாவாணர் அவர்கள்,  தமிழின்  இலக்கண இலக்கியம் என்ற சொற்களுக்கும் வடமொழியின் லக்ஷணம், லக்ஷியம் ஆகிய சொற்களுக்கும் காட்டப்படும்  ஒற்றுமையைக் குறிப்பிட்டு,  அதில் தமிழ் இலக்கணம் இலக்கியம் ஆகியவற்றிற்கு அவை குறித்த தெளிவான பொருள் உள்ளது. ஆனால் வடமொழி லக்ஷணம், லக்ஷியம் ஆகியவற்றிற்குப் பொருள் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இக்குறிப்பை மேலும் மிக விரிவாக விளக்க விரும்பிய சுவாமி ஞானப்பிரகாசர் இக்கட்டுரையை எழுதியுள்ளார்]

4. பொருளின் அமைப்பு  (தொடர்ச்சி ...)
[அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்,  கட்டுரையின் இப்பகுதியில்  கதிரியக்கம் பற்றித் தொடர்கிறார், சுடரியமும் சுடரிப் பொருள்களும், சுடரிய மாற்றம் (Radio-activity) குறித்து விளக்குகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்  (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ...]

6. ஒரு பெருமகிழ்ச்சி (தமிழ்ச் செய்திகள் பகுதி)
இதழாசிரியர்
வழக்கறிஞரும், சென்னை சட்டசபை உறுப்பினரும், கரத்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினருமான A.T. பன்னீர்செல்வம்  அவர்கள் சென்னை மாநில அரசின் "அகமந்திர நாயகர்" (Home-Member to the Government of Madras) பதவி பெற்றதற்கு , தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் பாராட்டு விழா நடத்தி  (ஜூலை 1934) பாராட்டு  தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு வாசித்தளித்த வாழ்த்துப் பாடல்களும் இடம் பெறுகின்றன]

7. மதிப்புரை
இதழாசிரியர்
['பாரவி' என்ற வடமொழிப்புலவர் இயற்றிய "கிராதார்ச்சுனீயம்" என்ற பெருங்காப்பியத்தை, யாழ்ப்பாணப் பேராசிரியர் வை. இராமசாமி சர்மா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட நூலுக்கும்,
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மலிவு விலைப் பதிப்பாக வெளியிட்ட  திருவள்ளுவர் நாட்குறிப்புக்கும்,
"தேசாபிமானி"  பத்திரிக்கையின் தலைவர் தா. பொ. மாசிலாமணிப் பிள்ளை வெளியிட்ட "மங்கைக்கோர் மதியுரை"  என்ற நூலுக்கும் மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment