Monday, June 13, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 2

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 2
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 2

_________________________________________________________

1. தேம்பாவணி
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[தேம்பாவணி மற்றும் தேம்பாவணியின் ஆசிரியர் வீரமாமுனிவர் பற்றிய அறிமுகத்தில் தொடக்கி; திருத்தக்கதேவர், கம்பர் ஆகியோரின் அடிதொட்டு வீரமாமுனிவர் அப்புலவர்கள்  வழியில் கையாண்ட கருத்துக்கள் ஆகியவற்றை விளக்கும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2.  திருந்திய கையெழுத்துக்கள்  (தொடர்ச்சி...)
வீ. உலகவூழியன்
[திருந்திய கையெழுத்தை மாணவர் எழுதிட  ஆசிரியர் அவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.  திருத்தமுறாக் கையெழுத்து படிப்பவருக்கு சலிப்பை ஏற்படுத்தும். பலநாள் படித்ததைத் திருத்தமுற தேர்வில் எழுதாத ஒரு  விடைத்தாள் சலிப்புற்றிருக்கும் ஒரு  மதிப்பீடு செய்பவரை அடைந்தால், குறைந்த மதிப்பெண்ணைப் பெற்றுத் தரும்.  திருந்திய எழுத்துக்கள் பற்றி காந்தியடிகள்  அறிவுறுத்திய கருத்துக்களை எடுத்துரைத்து, திருந்திய கையெழுத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதை வலியுறுத்தும்   இக்கட்டுரை... நிறைவுற்றது]

3. பொருளின் அமைப்பு
அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்
[ஒளி பற்றிய இயற்பியல் கட்டுரைகளை எழுதிய அ. ஸ்ரீநிவாஸாச்சாரியார்,  பொருள்  வகைகள் (திட, திரவ, வாயு), அவற்றின் பண்புகள், மூலப்பொருட்கள் மற்றும் கூட்டுப் பொருட்கள், பொருட்கூறுகள் (அணுக்கட்டமைப்பு) ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறார்.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. 'இலக்கியம்' 'இலக்கணம்'
ஞா. தேவநேயப்பாவாணர்
[மொழிகளின் பரவலால், பலமொழிகளுக்குப் பொதுவாய் அமைந்திடும் சொற்கள்; தமிழில் இருந்து பிற மொழிகளில் மருவியிருக்கக்கூடிய சொற்கள் எனத் தமது மொழிநூலில் அகராதி முறையிலும், கலைமுறையிலும் வெளியிட்டவற்றைப் பொழிலின் வழியே பகிர்ந்து கொள்கிறார். தமிழின்  இலக்கண இலக்கியம் என்ற சொற்களுக்கும் வடமொழியின் லக்ஷணம், லக்ஷியம் ஆகிய சொற்களுக்கும் உள்ள  ஒற்றுமையைக் காட்டுகிறார்.  தமிழ் இலக்கணம் இலக்கியம் ஆகியவற்றிற்கு அவை குறித்த தெளிவான பொருள் உள்ளது. ஆனால் லக்ஷணம், லக்ஷியம் ஆகியவற்றிற்குப் பொருள் இல்லை. வடமொழியில் இருந்து அனைத்து மொழிகளும் கடன்பெறும் என்றும், ஆனால் வடமொழி தனித்தியங்கும் எனக் கருதுவது  ஒரு தவறான கொள்கை என்கிறார்]

5. அஜந்தாவும் குடைவரைக் கோயில்களும் - மொழிபெயர்ப்பு
சி. கு. நாராயணசாமி முதலியார்
[அவுரங்கபாத் அருகிலுள்ள 'எல்லோரா'வில், 'இந்தியாத்திரிமலை' யின் சரிவில் கிழக்கு மேற்காக அமைந்த 29 குடைவரைக் கோயில்களைப் பற்றிய ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எல்லோரா 10 ஆம் நூற்றாண்டிலிருந்தே புகழ்பெற்ற இறைவழிபாட்டுத் தலமாக இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அஜந்தா குடைவரைகளில் அருமை, பெருமை, அழகு, சிறப்பு ஆகியவற்றை விவரிக்கிறது இக்கட்டுரை]

6. திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டின் அறிக்கை
 - ஜூன் 10, 11 1934 நடந்த இந்த விழா அறிக்கை, மாநாட்டில் கொண்டுவரப்பட்ட பத்துக்கும் மேலான  தீர்மானங்களைப் பட்டியலிடுகிறது.


[குறிப்பு: இந்த மாநாட்டில் தி. இலக்குமணப் பிள்ளை தமது மாணவர்களுடன்  இசையரங்கு நடத்தினார்.  அதற்குத் தலைமையேற்ற மறைமலையடிகள் அவர்கள், தி. இலக்குமணப் பிள்ளை அவர்களுக்கு "இசைத்தமிழ்ச் செல்வர்" என்ற பட்டமளிக்க வேண்டுகோள் விடுத்தார்.  அதன்படி திரு. இலக்குமணப் பிள்ளை B.A. (T. Lakshmana Pillai) அவர்களுக்கு "இசைத்தமிழ்ச் செல்வர்" பட்டமளிக்கப்பட்டு  மாநாட்டு விழாவில் பாராட்டப்பட்டார்.
விழாவில் பாடப்பட்ட பாடல் , வரவேற்புத் தலைவர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள்  நிகழ்த்திய வரவேற்புரை ஆகியவை பற்றிய   நிகழ்ச்சித் தொகுப்பு]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment