Friday, June 3, 2016

தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 4

_________________________________________________________

1.  பாவினம்
G. தேவநேசன்
[ஒரு மொழியானது,  காலத்திற்கேற்ப மக்களின் பயன்பாட்டின் அடிப்படையில் அதற்கேற்றவாறு திரிதல் இயல்பு. அவ்வாறே சங்ககால தமிழ்யாப்பும்  பாவாக இருந்தது பிற்காலத்தில் பாவினமாகத் திரிந்துள்ளது.  எல்லாப் பாவும் கலிப்பாவில் இருந்து தோன்றியவையே எனக் குறிப்பிட்ட பின்னர் இலக்கியங்களில் காணப்படும் பாவகைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. துறை, தாழிசை, விருத்தம் ஆகிய மூன்று பாவினங்களும்  கலிப்பா வகையே, தமிழ் யாப்பே  என விளக்கப்படுகிறது.  ]

2.  அரிசி - அதன் பொருளாதாரம்
B. N. ராஜன்
[சென்னைப் பல்கலைக் கழக ஆய்வு மாணவரான கட்டுரை ஆசிரியர்,  அரிசி உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது,  இந்திய அரிசி விளைச்சலில் 10 விழுக்காடு மட்டுமே  ஏற்றுமதி செய்யப்படுகிறது, ஆனால், உலக ஏற்றுமதி அளவின் ஒப்பீட்டில்  40 விழுக்காடு அரிசி இந்தியாவில் இருந்து  ஏற்றுமதி செய்யப்படுகிறது என்ற புள்ளிவிவரம் தருகிறார். இதற்குக் காரணம்  அரிசி உற்பத்தியில் பர்மாவின் பங்களிப்பு  நிலை என்றும், பர்மா இந்தியாவை விட்டுப் பிரிந்தால் இந்நிலை மாறும் என்றும் கூறுகிறார்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி மேலை நாடுகளில் பசை தயாரிக்கவும், கீழை நாடுகளில் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றது. தொழில் நுட்பக் கருவிகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கிய ஜப்பானும், தோட்டப்பயிர் பயிரிடலுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் இலங்கையும் இந்தியாவில் இருந்து அதிக அளவில் அரிசி கொள்முதல் செய்கின்றன. 
ஒரு வணிக சந்தையே உணவுப்பயிர் சாகுபடியை நிர்ணயிக்கிறது.  எனவே, அதிக வருமானம் தரும் வணிகப்பயிர் சாகுபடியை மேற்கொள்ளும்பொழுது   அரிசி சாகுபடியின் அளவு  குறையும்.  இக்காரணத்தால் , நாட்டின் தேவை கருதி அரிசி ஏற்றுமதியைத் தடை செய்வதால் நாட்டின் அரிசி தேவை தீராது, மாறாக வணிகப் பயிர் விளைச்சலில் கவனம் திருப்பப்பட்டுவிடும் என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து]

3. செல்வமும் வறுமையும்
சாமி. வேலாயுதம் பிள்ளை
[செல்வம் என்றால் உலக வழக்கில்  பொதுவாக என்ன பொருள் கொள்ளப்படுகிறது?  ஆனால் உண்மையாகவே செல்வம் என்பது என்ன?  ஒவ்வொரு வயதிலும் எவையெவை செல்வமாகக் கருதப்படும் என்று பல கோணங்களில் கருத்துக்களை முன் வைத்த பின்னர், உள்ளமே செல்வம் என்பதை வரையறுக்கும் என்று விளக்கமும் தரப்பட்டுள்ளது]

4. கலித்தொகையும் நச்சினார்க்கினியரும்  (தொடர்ச்சி...)
அ. வரத நஞ்சைய பிள்ளை
[கற்றறிந்தோர் ஓதும் கலி என்று புகழப்படும்  கலித்தொகையின்  சிறப்பு கூறும் கட்டுரை, தமிழ் இலக்கியத்திற்கே உரிய தனிநெறியான உள்ளுறை உவமப் பொருள் (பொருளை உள்ளுறுத்து மறைத்து குறிப்பால் உணர்த்தும் முறை, இது உவமப்போலி எனவும் அறியப்படும்) பொதிந்த கலித்தொகைப் பாடல்களின் இலக்கிய நயம் பாராட்டல். இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ப் பொழில்
பெ. இராமாநுஜம்
[சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானும், புலவர் தாமப்பல்கண்ணனாரும் சொக்கட்டான் ஆடிய நிகழ்ச்சியும், புலவரின் சூழ்ச்சியும் அதையுணர்ந்த மன்னனின் சினமும், பதிலுக்கு புலவரின் கடுஞ்சொல்லும், மன்னனின் வருத்தமும், புலவரின் பாராட்டும் என இருவருக்கிடையே நிகழ்ந்த உணர்வுப் போராட்ட நிகழ்வுகள் கதையாகக் கொடுக்கப்பட்டுள்ளது]

6. தொல்காப்பியத்தில் குறிப்பாக அமைந்துள்ள பல சைவநூற்  கருத்துக்கள்
வை. சுந்தரேச வாண்டையார்
[தொல்காப்பியத்தில் கட்டுரையாசிரியர் தாம் கண்ட சைவ நெறிகூறும் வரிகளைப் பட்டியலிடுகிறார், தொடர்கட்டுரையின் இப்பகுதியில் 'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்' என்ற தொல்காப்பியப் பாடலின் வரி சிவனைக் குறிப்பதாக விளக்கம் தருகிறார்]

7. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[T. V. சதாசிவப் பண்டாரத்தாரின் "முதற் குலோத்துங்க சோழன்" நூல் மூன்று ஆண்டுகளில் இரண்டு பதிப்புகள் கண்டு, இண்டர்மீடியட் வகுப்பின் பாடநூலாகவும் தேர்வு செய்யப்பட்ட சிறப்பு குறித்தும்;
சி.கு. நாராயணசாமி முதலியாரின் "வில்லிபுத்தூரர் சரிதம்"; வி. கோ. சூரியநாராயண சாத்திரியாரின் "பாவலர் விருந்து" ஆகிய நூல்களின் மீதும் மதிப்புரை வழங்கப் பட்டுள்ளது]

8. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[S. சோமசுந்தர பாரதியார் வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பொறுப்பேற்கிறார், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஆசிரியர் ந. மு. வேங்கடசாமி நாட்டாரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பொறுப்பேற்கிறார். 

தேர்வுகளில் மொழிப்பாடம் தவிர்த்த பிற கலைப்பாடங்களில் மாணவர் அவரவர் தாய்மொழியில் விடையளிப்பதற்குப் பரிந்துரைத்த சத்தியமூர்த்தி அய்யர் அவர்களது பரிந்துரை, பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவின்  ஆய்வினில் உள்ளது. 
ஆங்கில கலைநூல் கருத்துகளைத் தாய்மொழி நூலாக எழுதுபவரை ஊக்குவிக்கப் பரிசு வழங்க கல்விக்குழு ஏற்பாடு செய்துள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment