Thursday, June 2, 2016

தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 3

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 3

_________________________________________________________

1. அறுபத்து மூவர் காலம்   (தொடர்ச்சி...)
K. சோமசுந்தரம்
[நெல்வேலிப்போருடன் கிபி. 630 இல் சமணம் தமிழகத்தில் வழக்கொழிந்த அதே காலத்தில்,  மகேந்திர பல்லவன்(கிபி 600-625) அப்பரால் சைவம் தழுவினார்  என்றும், அப்பரும் சம்பந்தரும் சிறுத்தொண்ட நாயனாரும் ஒரே காலத்தவர் என்றும் கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
அப்பர் காலத்தில் வாழ்ந்த மற்றும்  அவர் பாடல்களில்  இடம் பெறும்  பிற நாயன்மார்கள் சம்பந்தர், அப்பூதியடிகள், கோச்செங்கட் சோழர், சண்டீசுவரர்,  கண்ணப்பர், நமி நந்தியடிகள், கணம்புல்லர்,  சாக்கிய நாயனார் என்றும் குறிப்பிடுகிறார். 
சம்பந்தரால் தெரிய வருபவர்கள் அப்பர், கோச்செங்கட் சோழர், நமி நந்தியடிகள், நின்றசீர் நெடுமாறன், மங்கையர்க்கரசி, குலச்சிறை நாயனார், திருநீலநக்க நாயனார், குங்கிலியக்கலனாயனார்,  சண்டீசுவர நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சிறுத்தொண்டர், முருக நாயனார், கலிப்பகை நாயனார், அப்பூதி நாயனார், புகழ்துணையார், பூசலார், செறுத்துணையார், கோட்புலியார், பெறுமிழலைக் குறும்பர், ஏயர்கோன் கலிக்காமர், மானக் கஞ்சாறர், விறன்மிண்டர், சோமாசிமாற நாயனார் ஆகியோர்  என்றும் குறிப்பிடுகிறார்.  
இத்தகவல்களைக் இக்கட்டுரை ஆசிரியர் இலக்கியம் தரும் வரலாற்றுச் செய்திகள் மூலம் முன்வைக்கிறார். இது ஒரு தொடர் கட்டுரை]

2. ஒரு  திருக்குறட்பாக் குறிப்பு
இ. கோவிந்தசாமி பிள்ளை
[திருக்குறள் வடமொழியில் "சுநீதி குசுமமாலா" என்ற பெயரிலும் ஒரு நூலாக  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  "ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமா னிந்திரனே சாலுங் கரி" என்ற ஒரு 'ஒன்றே முக்காலடி' குறளுக்கு '9 பக்கங்களில்' விளக்கம் எழுதியுள்ளார் கோவிந்தசாமி பிள்ளை; மேலும், இது ஒரு தொடர் கட்டுரையுமாகும்]

3. அதிகாரிகள் ஆற்றல்
ந. நடராசன்
[அறிக்கை எழுதவதைத் தவிர வேறு உலகநடப்பு ஒன்றையுமே அறியாத, கிணற்றுத் தவளைகளாக வாழும் அரசு அதிகாரிகளையும், அவர்கள் எளியவர்களின் உழைப்பைச்  சுரண்டி உண்டு கொழுத்து அவர்களையே அதிகாரம் செய்து ஏய்த்துக் கொண்டிருப்பதையும், எளியோர் தாம் ஏமாற்றப்படுவதையே அறியாது அடிமை வாழ்வு வாழ்வதையும் மறைமுகமாக உணர்த்தும் ஒரு நையாண்டிக் கதை]

4. தமிழ்ப் பொழில்
பெ. இராமாநுஜம்
[செல்வந்தர்களை மரங்களாகவும், புலவர்களை அந்த மரங்களைச் சார்ந்து படர்ந்து வாழும் கொடிகளெனவும், அவர்கள் புரவலர்களைப் பாடும் பாடல்களை நறுமணமுள்ள மலர்களாக உருவகம் செய்ததுடன், தற்காலத்துக் கலைஞர்கள் அலங்காரச் செடிகள் போல பொருட்செறிவின்றி இலக்கியம் படைக்கிறார்கள் என்று தமிழென்னும் பொழிலில் காணப்பெறும் அன்றைய நிலைமையை விவரித்துள்ளார் பெ. இராமாநுஜம். இது ஒரு தொடர் கட்டுரை]

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[திருப்பனந்தாள் தமிழ்ப் பரிசு, சென்னை புத்தகாலயப் பிரசார சங்கம், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரின் இலங்கைப் பயணம், இலங்கையில் தமிழின் நிலை ஆகிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த  'ஆதிரை'  என்ற இதழில் வெளியான தமிழகத்தில் தமிழ்க் கல்வியின் நிலையைப் பற்றிய  செய்தியைத் தொடர்ந்து  தமிழறிஞர்கள் செய்த கருத்துப் பரிமாற்றங்கள், சர்ச்சைகள் விளைவாக  அன்றையத் தமிழகத்தில் தமிழ்க் கல்வியின் நிலை தெரியவருகிறது ( பார்க்க: https://groups.google.com/d/msg/mintamil/mSKQenFr79E/uaM7aAvRAgAJ)]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment