Sunday, June 12, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 1

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 1

_________________________________________________________

1. தமிழ்ப்பொழில் புத்தாண்டு வாழ்த்து
கா. பொ. இரத்தினம்
[நேரிசை ஆசிரியப்பாவில் தமிழ்ப் பொழிலுக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்துப் பாடல்]

2. பழந்தமிழ்ப் பாவலருங் காவலரும்
கா. பொ. இரத்தினம்
[யாழ்ப்பாணம் வேலணையூரைச் சேர்ந்த பண்டிதர் திரு. கா. பொ. இரத்தினம் அவர்கள், காரைநகர் இளைஞர் ஐக்கிய சங்க இரண்டாம் ஆண்டுவிழாவில் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம்.  தமிழ் மொழியில் சங்ககாலப் பெண்பாற் புலவர்களைப் பட்டியலிட்டு, வேறு எம்மொழியிலாவது இவ்வளவு அதிகமாகப்  பெண்புலவர் இருந்துள்ளனரா?  என வியக்கிறார். பல பழந்தமிழ் நாடக நூல்கள் கிடைக்காமல் போய்விட்டன, தமிழில் எழுதப்பட்ட வானநூல், இசைநூல், சோதிட நூல்கள் பலவும் அழிந்துவிட்டன  என வருந்துகிறார். தமிழ்ப்புலவர்களின் பண்புகளையும், அவர்களது இலக்கியத் திறனையும் விவரிக்கும் கா. பொ. இரத்தினம்  அவர்களின் இந்த சொற்பொழிவுக் கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]

3. ஆழ்வார் பாரதமும் - சோழர்களும் (தொடர்ச்சி...)
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர்  பாரதத்தில், சிபியின் வழித்தோன்றலான சோழனும், தனது  முன்னோர் போன்றே  பிறருக்காக வாழும் பண்புடன் பாரதப் போரில் அசுவத்தாமனால் தாக்கப்பட்டாலும்  அவனது  படைகளை  கொன்று குவித்தான்;  அப்போர் வன்மைக்காகப் பாராட்டப்பட்டான்; பாடி வீட்டில் அசுவத்தாமன் அனைவரையும் கொன்ற பொழுது சோழன் அவனுடன் போரிட்டு இறந்தான் என்பது போன்ற  செய்திகள் இடம்பெறுவதைக் காட்டும்  ம. வி. இராகவன் அவர்களின் இக்கட்டுரை நிறைவுற்றது]

4. தருக்க விளக்க வினாவிடை
சித. நாராயணசாமிகள்
[நூல்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுக தருக்கப் பயிற்சி தேவை, தருக்க நூல்களின் கடின மொழியில் அமைந்துவிடுவதால், பல தருக்க நூல்களைப் பயின்று அவற்றை  அனைவரும் அறிந்து கொள்ள உதவும் நோக்கில் வினா-விடை வடிவில் எளிமையாக தான் எழுதிவரும் நூலின் பகுதியை பொழிலின் அன்பர்களுக்காகப் பொழிலின் வழி பகிர்ந்து கொள்கிறார் சித. நாராயணசாமிகள்.  தருக்கம் என்றால் என்ன ? என்ற அடிப்படையில் துவங்கி  வினா-விடை வகையில் தருக்கக் கலை விளக்கப்படுகிறது]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

6. திருந்திய கையெழுத்துக்கள்
வீ. உலகவூழியன்
['திருத்தம்' என்னும் சொல்  இயற்கை அழகைப் புலப்படுத்தாது, அது செயற்கை அழகினையே புலப்படுத்தும். பனையோலை எழுத்துக்கள் திருத்தமின்றி இருந்த காரணத்தால் நூல்களில் வழுக்கள் மிகுந்தன, இதனால் நேர்ந்த குறைபாடுகளின்  காரணமாக "எழுதினான் ஏட்டைக் கெடுத்தான்" என்ற பழமொழி உருவாகியது.  எழுதுவது எளிமை பெற்ற இக்காலத்தில் திருத்தமுற எழுதுதல் தேவை.  கடுஞ்சொற்கள் கேட்க இனிமை  தராதது போலவே, திருத்தமற்ற வகையில் எழுதிய பதிவு  கருத்துச்  செறிவைக் கொண்டிருந்தாலும் காண்பவர் விரும்பும் வண்ணம்  அமைந்திராது என்றக் கருத்தைக் கூறும்   இக்கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]
    
7. தமிழ்ச்செய்திகள்
இதழாசிரியர்
கரந்தைத் தமிழ்ச்சங்கம் திருநாவுக்கரசரின் திருவிழாவைக்  கொண்டாடியது; 
மேலைச் சிவபுரி சன்மார்க்க சங்கம், பண்டிதமணியால் துவக்கப்பட்ட சங்கமாகும். இச்சங்கம் தனது வெள்ளிவிழாவை உ.வே. சா. தலைமையில் கொண்டாடியது.
சென்னைப்பல்கலைக்கழகம், திராவிட மொழிகளில் எழுதப்படும் சிறந்த அறிவியல் நூலுக்கு ரூபாய் 750  பரிசுத் தொகை அறிவித்துள்ளது. அறிவியல் அறிஞரும், தமிழறிஞரும் இணைந்து எழுதும் நூல்களும் பரிசுக்கான  தகுதி பெறுபவையே எனக்குறிப்பிடும் இச்செய்தி பரிசுத் தொகையின் அளவு ஊக்கமளிப்பதாக இல்லை என்றக் கருத்தைப் பதிவு செய்கிறது.

8. மதிப்புரை
இதழாசிரியர்
[கோவைத் தமிழ்ச் சங்கம் வெளியிடும் "கொங்குமலர்" என்ற மாத இதழ் சிறந்த அறிஞர்கள்  எழுதும் அருமையான கட்டுரைகளைத் தாங்கி வெளிவருவதைக் குறிப்பிட்டு, அனைவரும் படித்துப் பயனுற பரிந்துரைக்கப்படுகிறது]






 ... இந்த இதழின் முன் அட்டையில், இசைத் தமிழ்ச்செல்வர் திரு. இலக்குமணப் பிள்ளை B.A. (T. Lakshmana Pillai) ,  திருவனந்தபுரம் அவர்களின் படம் வெளியிடப்பட்டுள்ளது.  எனினும் அவர் பற்றியக் குறிப்புகள் ஏதும் கட்டுரைகளில் காணப்படவில்லை...
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]



No comments:

Post a Comment