Monday, June 27, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 4

_________________________________________________________

1. தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பாராய்ச்சி (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[துணர்: 8  -  மலர்: 12 இல் வெளியான கட்டுரையின்  தொடர்ச்சி இது. 'பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது ம. நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ' தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும்' என்ற  விமர்சனம் எழுதி வருகிறார்.  ஆனால், இதற்கிடையில் அந்த நூல் சென்னை பல்கலைக்கழத்தின் தமிழ் வித்துவான் தேர்வுக்குக்குரிய பாடநூலாக அறிவிக்கப்பட்டு விட்டமையால் , ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களும், மாணவர்கள்  சாத்திரியார் நூலை அவ்வாறே ஏற்றுக் கொள்ளாமல் ஆய்ந்து படித்து உண்மையை அறிய  உதவும் நோக்கில் தானும் ஒரு  கட்டுரை எழுதி வருகிறார். சென்ற பகுதியில் கொடுத்த முதல் சூத்திரத்திற்கான விளக்கவுரையைத் தொடர்ந்து, இப்பகுதியில் இரண்டாம் சூத்திரம் முதலாக ஆராய்கிறார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை]

2. வரருசி கதை (தொடர்ச்சி ...)
R. பொன்னுசாமி பிள்ளை
வடமொழிப் புலவர் பாணினி முனிவர் எழுதிய 'அஷ்டாத்யாயீ' என்ற இலக்கண நூலுக்கு 'வார்த்திகம்' என்ற உரைநூலை எழுதியவர் வரருசி என்பவர். வரருசியாரின் வாழ்க்கை வரலாறு 'கதாசரித்சாகரம்' என்ற கதைநூலில் இடம்பெற்றுள்ளது. அக்கதையைத் தழுவி வரருசியாரின்  கதையை பொன்னுசாமி பிள்ளை எழுதியுள்ளார். 
இப்பகுதியில்; சிவனின் அருளால் அஷ்டாத்யாயீ இயற்றுகிறார் பாணினி.  பாணினியுடன் இலக்கண விவாதத்தில் ஈடுபட்ட (அவரது ஆசிரியர் தகுதியில்  இருந்த) வரருசியார் பாணினியிடம் தோல்வியுறுகிறார்.  அதுவரை சிறப்புடன்  வழக்கில் இருந்த இலக்கண நூலாகிய ஐந்திரம் இதனால் தனது பெருமை குன்றி மறக்கப்படுகிறது.  இந்நிகழ்ச்சி தொன்மக் கதையின் பாணியில் விவரிக்கப்படுகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

3. நயன நூல் நவநீதம் (தொடர்ச்சி ...)
S. அமிர்தலிங்கம் பிள்ளை
[ஐம்பொறிகளில் முக்கியத்துவம் வாய்ந்த கண் குறித்த கட்டுரை: கண்ணின் அமைப்பு, தொழில் என உயிரியல் அடிப்படை கொண்ட விளக்கங்களுடன் விழிகள் குறித்த ஒரு  விரிவான விளக்கக் கட்டுரை. 
கட்டுரையின் இப்பகுதியில்; வெள்ளெழுத்து, கிட்டெழுத்து போன்ற பார்வைக் குறைபாடுகள்,  கண் நோய்கள், அவற்றைத் தவிர்க்க அறிவுரைகள், கண்ணைப் பராமரிக்கும் முறை போன்றவை விளக்கப்படுகிறது. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

4. வல்வடுகு நான்கு - A Chapter in the History of Tanjore. The Nayak Kings.
K.S. சுந்தரம் பிள்ளை
[சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னர் (1200 களில்) தமிழ் மன்னர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருந்த பொழுது, தமிழகத்தில் அமைதி குலைந்த பொழுது, அலாவுதீன் கில்ஜி அனுப்பிய அவரின் தளபதி மாலிக்காபூரும் படைகளும் மதுரையை ஆட்சி செய்த  இராசசிம்ம பாண்டியனை விரட்டியடித்து தமிழகப்பகுதியை சூறையாடி ஆட்சியைக்  கைப்பற்றினர்.  அந்நாளில் இருந்து அன்னியர் ஆட்சியின் கீழ் சென்ற தமிழகத்தை முகமதியரிடம் இருந்து தங்கள் வசம் கைப்பற்றினர் விஜயநகர மன்னர்கள். 
அவர்களின் பிரதிநிதிகளாக தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் பற்றி சுந்தரம் பிள்ளை இக்கட்டுரையில் விவரிக்கிறார். கட்டுரையின் இப்பகுதி தரும் செய்திகள்  வழியாக அச்சுத தேவராயர் (கிபி 1529-1542)  மறைவுக்குப் பிறகு, தஞ்சையை மீட்க முயன்ற சோழர்குல வீரசேகர சோழன்  தஞ்சையைக் கைப்பற்றினான் என்றும்; 
மறைந்த அச்சுததேவராயரின் பட்டத்தரசியின் இளைய சகோதரியை மணமுடித்து,  வீரசேகர சோழனை வென்று தஞ்சையை  அவனிடம் இருந்து  கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்த சேவப்ப நாயக்கர் குறித்தும், இம்மன்னர்களின் கல்வெட்டுகள் தரும் செய்திகள் குறித்தும், இவர்களது இறைப்பணிகள் குறித்தும், இவர்களால் தஞ்சை பெரிய கோவில் கட்டமைப்பில் ஏற்பட்ட சேர்க்கைகள், மாற்றங்கள் குறித்தும் அறியலாம்.
தஞ்சையை மீட்க முயன்று தோல்வியுற்று, அதனை நாயக்கர் வசம் இழந்த சோழர்குல வீரசேகர சோழன் மதுரை சென்று அங்கு ஆட்சியைக் கைப்பற்றியிருந்த சந்திரசேகர பாண்டியனை வென்று 1559 இல்  மதுரையில்  ஆட்சி அமைத்தான். விரட்டப்பட்ட  சந்திரசேகர பாண்டியன் தஞ்சை நாயக்கரிடம் முறையிட்டு உதவி கோர, தானைத் தலைவர் நாகம நாயக்கன்  என்பவர்  சோழனிடம் இருந்து மதுரையை மீட்கப் படையுடன் அனுப்பப்பட்டார். சோழனிடம் இருந்து மதுரையை மீட்டாலும் அதனைப் பாண்டியனிடமும் கொடுக்காமல் நாயக்கர் தங்கள் ஆட்சியை அங்கும் நிறுவினர் என்ற வரலாற்றுத் தகவலும் இப்பகுதியில்  இடம் பெற்றுள்ளது.  இக்கட்டுரை தொடரும்]

5. நெடுந் தொகைக் குறும்பொருள் (தொடர்ச்சி ...)
S. மாணிக்கவாசக முதலியார்
சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களுள் நெடுந்தொகை என்றும் கூறப்படும் அகநானூற்றுப் பாடல்களுக்கு சிற்றுரை வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். தொடர் கட்டுரையின் இப்பகுதியில்,  3  மற்றும் 4  ஆம் பாடல்களுக்கு தனது சிற்றுரைகளை  வரைகிறார் மாணிக்கவாசக முதலியார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. கம்பர் பாராட்டிய பழந்தமிழ் நூல்கள்
ஆ. சிவசுப்பிரமணியன்
[கல்வியிற் பெரியார் கம்பர் தமது பாடல்களில் எடுத்தாண்ட பழந்தமிழ்நூல் கருத்துக்கள் குறித்து தொகுத்தளிக்கும் கட்டுரையை  வழங்குகிறார் சிவசுப்பிரமணியன். கம்பர் தமது பாடல்களில் பாராட்டிய நூல்கள் திருக்குறளும், சங்கக் காப்பியங்களும், கொங்கு வேளிர் செய்த உதயணன் கதையுமாகும் எனக் குறிப்பிடும்  ஆசிரியர் கட்டுரையின் இப்பகுதியில் கம்பர் பயன் படுத்திய திருக்குறள் கருத்துக்களை வழங்குகிறார். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

7. தமிழ்ச் செய்திகள்
சிவ. குப்புசாமி
[தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், செந்தமிழ்ப் புரவலரும், வழக்கறிஞரும், தமிழ்த் தொண்டரும்,   தமிழ்ப் பொழிலின் ஆசிரியருமான  த.வே. உமாமகேசுவரம் பிள்ளை அவர்களுக்கும், தஞ்சைக் கூட்டுறவுப் பதிப்பகத் தலைவர் ஐ. குமாரசாமிப் பிள்ளை அவர்களுக்கும் தமிழக அரசு அவர்களது தொண்டுகளைப் பாராட்டி  'அரசர் வெள்ளிவிழாப் பதக்கத்தையும்', 'இராவ்சாகிப் பட்டத்தையும்' அளித்துச் சிறப்பித்த  செய்தி வழங்கப்பட்டு அன்னாருக்குப் பாராட்டுகள் கூறப்பட்டுள்ளது.]

8.மதிப்புரை
இதழாசிரியர்
விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகளின் தமிழ்மொழிபெயர்ப்பின் தொகுப்பை  'இராஜயோகம்' என்ற தலைப்பில் மிகச்சிறந்த பதிப்பாகவும்,  மலிவுப்பதிப்பாகவும்  (340 பக்கங்கள் கொண்ட நூலின் விலை ஒன்றேகால் ரூபாய்) இராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள   முயற்சி  பாராட்டப்பட்டு, மொழிபெயர்த்தவரின் திறமை போற்றப்பட்டுள்ளது.  பதஞ்சலி  யோகசூதிரங்களின் மூலமும், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும் பயன்தரும் வகையில் இந்நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது  இதன் சிறப்பு]

9. இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பட்டியல்
[நன்கொடை  அளித்தவர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பிட்டு,அவர்களுக்கு நன்றி நவிலல்]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment