Thursday, June 9, 2016

தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 10

_________________________________________________________

1. சைவ சித்தாந்த மகாசமாச இளைஞர் மகாநாட்டுத்  தலைமைப் பேருரை
நீ. கந்தசாமி
[சமய வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற வரலாற்றுப் பார்வை,  சைவ சமயத்தின் சிறப்பு, அதன் வளர்ச்சியில் இளைஞர் ஆற்ற வேண்டிய பங்கு, சைவத்துடன் இணைந்த தமிழ்த் தொண்டு  ஆகியனவற்றை இளைஞர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறார் நீ. கந்தசாமி]

2. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும் (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் யாவருடைய உரையிலும் குற்றங் குறைகள் கூறி இறுதியில் தொல்காப்பியத்தில் வடமொழி சிவஞான முனிவர் நூலின் தாக்கம் என்று தனது நூலில்  சொல்லிச் சென்றுள்ளார். அதற்கான  மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ... ]

3. சாக்கைக் கூத்து (தொடர்ச்சி...)
T. M. இராமச்சந்திரன் செட்டியார்
[கேரள திருவாங்கூர் உற்சவங்களில் சாக்கையர் கூத்து ஆடப்படும் முறை விளக்கப்படுகிறது.  சாக்கியக் கூத்துப்பாடல்கள், புராணங்களை அடிப்படையாகக் கொண்டு சாக்கியக் கூத்து பாணியில் பல ஆயிரம் சுலோகங்களாக உருவாக்கப்பட்டவை. அவற்றை நினைவிலிருந்து கூத்தர்கள் உரைப்பார்கள், இவை பெரும்பாலும் அச்சு வடிவில் வெளிவராதவை. பண்டைய கேரளாவில் இவை பெரு நாடக வடிவில் எழுதப்பட்டு நிகழ்த்தப்பட்டும்; பின்னர், காலப்போக்கில் அவற்றின் ஓரிரு பகுதிகள் மட்டும் நடத்திக்காட்டப்பட்டும்;  பின்னர் அவற்றிலும்  நகைச்சுவை முக்கியமானப் பகுதியாகவும், மக்களால் விரும்பப்பட்டப் பகுதியாகவும் இருந்தமையால் அப்பகுதிகளை மட்டும் நம்பியார், நங்கையார் ஆகியோருடன் பங்கேற்று  சாக்கியரால் கூத்துகளில்  நடத்திக் காட்டப்படுவது வழக்கமானது.  முற்காலத்தில் நங்கையார் பாட, அதனை சாக்கியார் நடித்துக் காட்டும் வழக்கமும் இருந்திருக்கிறது]

4. வள்ளல் பேகன் - ஒரு சிறு நாடகம்  (தொடர்ச்சி...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் கொடைமடத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவன் மனைவி கண்ணகியை பேகன் சினந்து வெளியேற்ற, அவனைப் பிரிந்தாலும் அவனையே நினைந்து  காட்டில் தனியே வாழ்ந்து வருந்திய கண்ணகியைக் கண்டு  இரங்கிய  தமிழ்ப் புலவர்கள் அவர்களை இணைக்க மேற்கொண்ட முயற்சி நாடகமாக்கப்பட்டுள்ளது. இது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் மாணவர்கள் நடிப்பில் அரங்கேறிய நாடகம் ... தொடர்கிறது.  இப்பகுதியில் பேகன் மயிலுக்குப் போர்வை வழங்கும் காட்சி இடம் பெறுகிறது]

5. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[1934  மார்ச் மாதம் உ.வே. சா. தலைமையில் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நாள் மற்றும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவை கொண்டாடவிருப்பதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற தமிழன்பர் மாநாடு மற்றும் அதில் இடம் பெற்ற புத்தகக் கண்காட்சி ஆகியவற்றைப் பற்றியும்; தமிழில் உருவாக வேண்டிய நூல்கள், கலைச்சொற்கள், பள்ளியில் தமிழ்க் கல்வி வளர்ச்சி, தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் போன்ற கருத்துக்கள் மாநாட்டில் இடம் பெற்றதை குறிப்பிடுகிறது இச்செய்திகள் பகுதி.  அண்ணாமலைப்  பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி கழகம் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது]

6. சென்னை மாகாணத் தமிழர் மாநாடு - அறிக்கை
வரவேற்புக் கழகக் குழுவினர்
[நெல்லையில் மார்ச்  1934 இல்  தமிழர் மாநாடு நடத்த ஏற்பாடுகள்  செய்வதை முன்னிட்டு அதற்கான வரவேற்புக் குழு ஒன்றும்  அமைக்கப்படுகிறது  என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment