Friday, June 17, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 6

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 6
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 6

_________________________________________________________

1. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்  (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பு 38 இன் தொடர்ச்சி ...கட்டுரையின் இப்பகுதியில் தொடர்கிறது ...]

2. நன்னெறி
வீ. குமாரசாமி ஐயர்
[தொன்று தொட்டு தமிழ்ப்புலவர்கள் நன்னெறி அறிவுறுத்துவதில் கவனம் செலுத்தினர்.  மன்னனுக்குக் கூறப்படும் அறிவுரை நாட்டு மக்களின் நல்வாழ்விற்கு வழி வகுக்கும் என்பது அறிந்து மன்னன் என்றாலும் துணிந்து வசைபாடியும் அறிவுரை கூறத் தயங்கியதில்லை. இவர்கள் பாடல்கள் திருக்குறள், நாலடியார், திரிகடுகம், ஆசாரக்கோவை போன்ற இலக்கியங்களின்  வழியாகக் கொல்லாமை, புலால் உண்ணாமை, கள்ளாமை, நன்றி மறவாமை  போன்ற அறங்களை மக்களிடம் பரப்பியது. 'கற்பனைக் களஞ்சியம்' என்று புகழப்பட்ட சிவப்பிரகாச அடிகளின் 'நன்னெறி' நூல் எளிய உவமைகளைக் கொண்டு, யாவரும் அறிந்த உடல் உறுப்புகளின் இயல்பாட்டை உவமையாகக் காட்டியே நன்னெறிகளை அறிவுறுத்தும் பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது என்று தமிழின் நன்னெறிப் பாடல்களின் வரலாற்றையும், சிவப்பிரகாச அடிகளின் நன்னெறிப்  பாடல்களில் காணும் உவமைச் சிறப்பினையும் விளக்குகிறார் வீ. குமாரசாமி ஐயர்]

3. ஏர் என்னும் வைப்புத்தலம்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[கும்பகோணத்திற்கு அருகே வடக்கில் மூன்று கி. மீ. தொலைவில் உள்ள 'ஏராரம்' அல்லது 'ஏராவரம்' என்ற ஊர் பண்டைய சோழநாட்டின் பேரூரில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்று கருதும் சதாசிவப் பண்டாரத்தார், அவ்வூரின் தென்மேற்கு மூலையில், மிக மிகப் பாழடைந்த நிலையில் உள்ள ஒரு கோவில் சிவன் கோவில் தோற்றத்தில் உள்ளது என்றும், அதில் தாம் படித்த கல்வெட்டில் "இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்மடி சோழ மங்கலம்" என்ற சொற்றொடரைக் கொண்டு இலக்கிய ஆய்வுகள் செய்கிறார். கல்வெட்டு விக்கிரம சோழன் (கி.பி. 1120-1136) காலக் கல்வெட்டு என்றும், அப்பர் பாடிய தேவாரப் பாடலில் இடம் பெற்ற "இன்னம்பர் ஏர் இடவை"   என்ற தலம் இது என்றும் கூறுகிறார். மேலும்,  சம்பந்தர் மற்றும் சுந்தரர் இத்தலத்தைப் பாடிய பாடல்கள் இல்லை, அவர்களும் பாடி அந்தப் பாடல்கள் அழிந்துபட்டு நமக்குக் கிடைக்காமல் போயிருக்கக்கூடும் என்றும் ஐயுறுகிறார்.  மேலும் இந்த ஊர் அக்காலத்தில் இன்னம்பூர் நாட்டில் "ஏர்" என்ற பெயருடனும், பின்னர் மன்னரால் 'மும்முடிச் சோழ மங்கலம்' எனப் பெயரிடப்பட்டிருக்கலாம் எனவும், காலப்போக்கில் 'ஏர்' என்ற பெயர் மருவி இக்காலத்தில் ஏரகரம் (ஏராரம்) என்ற சிற்றூராக மாறியது என்றும் கூறுகிறார். தேவாரப் பாடல் பெற்ற இந்த ஊர் அக்கால ஏர் என்ற ஊர் என்பதற்குச் சான்றாக, இராஜராஜேச்சுரம் மற்றும் தஞ்சைக் கல்வெட்டுத் தகவலையும் வழங்கியுள்ளார்.  ராஜராஜ சோழனின் ஆட்சிக்  காலத்தில் இந்த ஊர் மும்மடி சோழமங்கலம் என வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார் சதாசிவப் பண்டாரத்தார்]

4. நமது வரலாறுகளும் கல்வெட்டாதாரமும்
அ. கந்தசாமிப் பிள்ளை
[தமிழகத்தின் இலக்கியம் கூறும் தொன்மக் கதைகளுக்கு தக்கச் சான்றுகளும் கிடைக்கும் நிலைமையும் உள்ளது என்று கூறும் கந்தசாமிப் பிள்ளை, சேக்கிழார் பற்றி வழங்கும் தொன்மக் கதை வழி அதனைச் சுட்டிக் காட்டுகிறார்.  சேக்கிழார்  தொண்டை நாட்டின் குன்றத்தூரைச் சேர்ந்தவர், முன்னொரு காலத்தில் சோழ அரசனால் அங்குக் குடியேற்றப்பட்ட 'சேக்கிழார்' என்ற குடியைச் சேர்ந்தவர் என்றும்; கல்வியிற் சிறந்தவராக இருந்ததால் சோழனின் அமைச்சராகப் பணியாற்றும் தகுதி பெற்றதுடன், "உத்தமச்சோழப் பல்லவராயர்" என்ற பட்டதையும் பெற்றார் என்றும்; சோழ நாட்டின் திருநாகேச்சுவரம் இறைவனின்  மீது பற்று மிகக்கொண்டவராக இருந்ததால் தனது குன்றத்தூரில் கோவில் ஒன்று எடுப்பித்து அதற்கு 'திருநாகேச்சுவரம்'  என்ற பெயரிட்டு கொடைகள் வழங்கினார் என்றும் உமாபதி சிவம் வழங்கிய சேக்கிழார் நாயனார் புராணத்தின் மூலம் அறிகிறோம். இவ்வரலாற்றுச் செய்தி  உண்மையே என்பதைக் குன்றத்தூரில்  உள்ள திருநாகேச்சுவரம் கோவில் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன என்று கூறி அதற்கான ஆதாரங்களை இக்கட்டுரையில்  குறிப்பிடுகிறார் கந்தசாமிப் பிள்ளை]

5. மண்ணியல் சிறுதேர்
அ. சிதம்பரநாதஞ் செட்டியார்
[சூத்திரகன் என்னும் வடமொழிவாணர் எழுதிய வடமொழி நாடக நூலான 'மிருச்சகடிக' என்னும் நூல், "மண்ணியல் சிறுதேர்" என்ற பாட்டிடை உரைநடை நூலாக பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களால்  மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.  இந்நூல் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் வெளியீடு.  இந்நூலைப்பற்றி தமிழறிஞர்கள் அளித்த பாராட்டுகளையும், பாரதியார் வழங்கிய நாடகத்தின் கதைச்சுருக்கத்தினையும் வழங்கிய பின்னர் நூலின் இலக்கிய நலம் பாராட்டுகிறார் சிதம்பரநாதஞ் செட்டியார்.  இக்கட்டுரை தொடரும்]

6. "செயப்படு பொருளைச் செய்தது போல" என்னும் சூத்திரத்திற்குச் சங்கர நமச்சிவாயர் உரை பொருந்துமாறு
ச. தண்டபாணி தேசிகர்
['செயப்படு பொருளைச் செய்தது போல' என்னும் சூத்திரம் பற்றி இலக்கணநூல் உரையாசிரியர்களின் விளக்கம் இக்கட்டுரையில் ஒப்புநோக்கப்படுகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment