Tuesday, June 21, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 10

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 10
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 10

_________________________________________________________


1. விரையாக்கலியும் விடேல்விடுகும்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[திருப்புறம்பியம் சிவன் கோவில்  கல்வெட்டுகள் மூன்றில்  " விரையாக்கலி" என்ற ஒரு சொல்  காணப்படுகிறது. இக்கல்வெட்டுகளில், முதலாம் இராசராச சோழன் காலத்தியக் கல்வெட்டு "விரையாக்கலி என்னும் நிறைகோல்" என கோவிலில் இருந்த நிறைகோலையும்;   முதலாம் இராசராசேந்திரன் காலத்தியக் கல்வெட்டு "விரையாக்கலிப் பெருந்தெரு" என திருப்புறம்பியத்தில் அந்நாளில் இருந்த தெரு ஒன்றையும்;    மூன்றாவது கல்வெட்டு குலோத்துங்கச் சோழன் (முதலாம் குலோத்துங்கன் அல்லன், இவன்  தவிர்த்த மற்ற இரு குலோத்துங்கன்களில் எவரோ ஒருவர்)  காலத்தியக் கல்வெட்டு "திருவாணை திருவிரையாக்கலி" என சிவபெருமானது ஆணை என்ற பொருளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. பட்டினத்துப் பிள்ளையார் வழங்கிய நான்மணி மாலையில் உள்ள ஒரு பாடலிலும் விரையாக்கலி என்பது "இறைவனின் ஆணை" என்ற பொருளில் வருவதால்  "விரையாக்கலி என்பது கடவுளின் ஆணை" என்பதைக் குறிக்கிறது என்று உறுதிப்படக் கூறுகிறார் சதாசிவப் பண்டாரத்தார். அடுத்து வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் பொருட்டு மூன்று  கல்வெட்டுகளின் செய்தியும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

தெள்ளாறு எறிந்த (மூன்றாம்) நந்திவர்மன் (கி.பி. 830-854) என்ற பல்லவ மன்னனைக் குறிக்கும் "விடேல்விடுகு" என்ற   சொல் "விடேல்விடுகே" என நந்திக் கலம்பம் பாடலிலும்; "நந்தி விடேல்விடுகு", "வீரஞ்செல்லும் விடேல்விடுகு" என்று மேலும் இரு பாடல்களிலும் குறிப்பிடப்படுகிறது. இப்பெயரில்  சதுர்வேதி மங்கலம், தலைவன் ஒருவனுக்குப் பட்டம் ஆகியவையும் பல்லவ மன்னன்  காலத்தில் கொடுக்கப்பட்டதாகக்  கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. காஞ்சி பரமேச்சுர விண்ணகரக் கல்வெட்டின் செய்தி ஒன்று, விடேல்விடுகு என்பது "பல்லவ மன்னனின் ஆணை" என்ற பொருளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இக்கல்வெட்டு முதலாம் நந்திவர்மன் (கி.பி. 717-779) காலத்தியக் கல்வெட்டு  என்றும் சதாசிவப் பண்டாரத்தார் கூறுகிறார்.

2. ஆந்தை என்னும் தொகை விரியுமாறு  (தொடர்ச்சி ...)
ஆ. சிவசுப்பிரமணியன்
["ஆந்தையைப் பற்றிய ஐயம்" என்று "செந்தமிழ்" பத்திரிக்கையில்  வெளியான கட்டுரைக்கு; "ஆதனாகிய தந்தையை உடையவன் அல்லது ஆதனைத் தந்தையாக உடையவன்" என அன்மொழித் தொகையால் பொருள் கொள்ளுவதே பொருந்தும் என விளக்கம் அளிக்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன்.  மேலும் விரிவாக; சாத்தந்தை, எந்தை, பூந்தை, எயினந்தை, கீரந்தை மனைவி, கீரன்றாய், கொற்றங்கொற்றன், நம்பிமகன், நங்கைகணவன், கொற்றந்தை எனப் பல பெயர்களை எடுத்துக்காட்டாகக் கொண்டும், தொல்காப்பியம் எழுத்ததிகாரம்  சூத்திரங்களைக்  ( 347-350) கொண்டும் பொருள் கொள்ளும் முறையை  விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர். இத்தொடர் கட்டுரை நிறைவுற்றது]

3. கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[இரண்டாம் அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதியில், வகுத்தற்றாட்டாந்தம், புணர்த்தற்றாட்டாந்தம்,  கூட்டுத்தாட்டாந்தம், பிரிநிலைத்தாட்டாந்தம், தாட்டாந்தத்தின் உள்ளுறை, பொருள்விரியுள்ளுறை மதம், குணவிரியுள்ளுறை மதம், உரிநிலையுள்ளுறை மதம், பயனிலையுள்ளுறை மதம், அப்பியாசம் ஆகிய கருத்தாக்கங்கள் விளக்கப்படுகின்றன.  இது ஒரு தொடர் கட்டுரை]

4. சிலசொற்களின் பொருள்  (தொடர்ச்சி ...)
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள மாந்தர் என்ற  சொல்லின்  பொருள் விளக்கம் இக்கட்டுரையிலும் தொடர்கிறது]

5. வீரசோழிய உரையாசிரியர் காலம்
E. R. நரசிம்ம ஐயங்கார்
[வீரராசேந்திரன் என்ற வீரசோழன் (ஆட்சிக்காலம் கி.பி. 1062-1070) காலத்தவராகிய புத்தமித்திரனார் எழுதிய நூல் வீரசோழியம்.  வீரசோழியத்திற்குப் பெருந்தேவனார் உரை வழங்கினார்.  பெருந்தேவனார் காலம் பற்றி வழங்கும் பல  கருத்துக்கள் பிழையானவை  எனக் கருதி  மறு ஆய்வு செய்கிறார் நரசிம்ம ஐயங்கார்.
போற்றுவாரின்றி மறக்கப்பட்டு இருந்த வீரசோழியத்திற்கு உரை எழுதி கவனத்திற்குக் கொண்டுவந்தவர் பெருந்தேவனார். பெருந்தேவனார் உரையில் மேற்கோள்களாகக் காட்டப்பட்ட நூல்கள் யாவும் காலத்தால் பெருந்தேவனாருக்கும் முற்பட்டவையாக இருக்க வேண்டும் என்ற  அடிப்படையில், கண்டனலங்காரம், தண்டியலங்காரமும் அதன்  உரையும், வீரசோழியம் உரை ஆகியவை காலக்கோட்டில் முதல், இடை, கடை என வரிசைப்படுத்துகிறார் இக்கட்டுரை ஆசிரியர். கண்டனலங்காரம்  குறிப்பிடும் மன்னன் இரண்டாம் இராசராச சோழன்  (கிபி 1146-1163 ஆட்சிக்காலம்) என்பது இவரது முடிபு. 
கட்டுரையின் இப்பகுதியில்;  தண்டியலங்காரத்தின் சிறப்புப் பாயிரம் இந்நூலின் ஆசிரியர் தண்டியார் என்றும் தண்டியாரின்  தந்தை அம்பிகாபதி என்றும் உணர்த்துகிறது எனக் குறிப்பிடுகிறார். அத்துடன் அம்பிகாபதி  நாடகத் தொழில் புரிந்த கூத்தர் என்பதும் தெரிகிறது.  12- ஆம் நூற்றாண்டில் ஆலி நாட்டுப் பகுதியைச் சேர்ந்த "ஓட்டக்கூத்தர்" மற்றும் காவிரி நாட்டுப்  பகுதியைச் சேர்ந்த "அம்பிகாபதிக் கூத்தர்" என இரு கூத்தர் புலவர்கள் இரண்டாம் இராசராசன் அவைப்புலவர்களாக இருந்துள்ளனர். புலவர் அம்பிகாபதிக் கூத்தர் ஐந்திலக்கணநூல் எழுதியவர், அவரது மகன் தண்டியார் தண்டியலங்காரவுரை எழுதியவர். தண்டியலங்காரமும் அதன் உரையும்  12- ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.
தக்காயபரணியை  எழுதியவர் ஒட்டக்கூத்தர் அல்லர், ஒட்டக்கூத்தர் எழுதினார் என   உறுதிப்படுத்தும் தகவலும்  இல்லை.  தக்காயபரணியை  எழுதியவர் அம்பிகாபதிக் கூத்தர் என்று கூறி அதற்கான சான்றுகளையும் கொடுக்கிறார் நரசிம்ம ஐயங்கார். அம்பிகாபதி "கவிச்சக்கரவர்த்தி கூத்தர்" எனவும், ஒட்டக்கூத்தர் "கவிச்சக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர்" எனவும் வழங்கப்பட்டிருக்கலாம் என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்து. இந்த ஆய்வுக் கட்டுரை தொடர்கிறது]

6. சோழன் கரிகால் வளவன் - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை சோழன் கரிகால் வளவனின்  வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
நாடகத்தின் இப்பகுதியில், கரிகால் வளவன் முதியவர் வடிவுதாங்கி, முதியோர் இருவரின் வழக்கினை முடிக்கிறார். இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment