Friday, June 24, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 1

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 1
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 1

_________________________________________________________

1. திருக்குறட் பாக்கள் சிலவற்றைச் சைவப்பெரியார் சிலர் ஆண்டுள்ள முறைமை
ந.மு. வேங்கடசாமி நாட்டார்
[திருக்குறள் கருத்துக்கள் சைவ இலக்கியங்களில் எடுத்தாளப்பட்டதற்கான மேற்கோள்கள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. நம்பியாரூரர் பாடிய திருநெல்வாயில் அறத்துரைப் பதிகங்கள்; உய்யவந்த  தேவநாயனாரின் திருக்களிற்றுப்படியார் நூலின் பாடல்கள் ஆகியவற்றில்  இடம் பெறும் திருக்குறள் கருத்துக்கள் ஆகியவற்றை மேற்கோள்களாகக் காட்டி விளக்குகிறார் வேங்கடசாமி நாட்டார்]

2. வேம்பையர்கோன் நாராயணன் இயற்றிய சிராமலை அந்தாதி
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[மதுரைக்கருகில் இருக்கும் வேம்பத்தூர் என்ற பழமையான ஊரில்  வாழ்ந்த மணியன் என்பவரின் மகனான நாராயணன் என்னும் புலவர்  'சிராமலை அந்தாதி' என்ற நூலை இயற்றினார். இந்நூல் சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்ட 102 கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டது, சிராமலையில் எழுந்தருளியுள்ள தாயுமானவரான சிவனின் மீது பாடப்பட்ட பக்திச்சுவை நிரம்பிய அந்தாதிப் பாடல்களைக் கொண்டமைந்துள்ளது.  இப்பாடல்கள் யாவுமே திருச்சி மலைக்கோட்டையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன.  இப்பாடல்கள் படி எடுக்கப்பட்டு தென்னிந்தியக் கல்வெட்டுப் புத்தகம் நான்காம் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 15 பாடல்கள் இக்கட்டுரையில் இடம்பெறுகின்றன]

3. சேக்கிழாரும் கம்பரும்  (தொடர்ச்சி ...)
R. P. அமிர்தலிங்கம் பிள்ளை
[சேக்கிழார் மற்றும் கம்பரின் இலக்கியத் திறனை ஒப்பிட்டும், அவர்களது படைப்புகளான பெரியபுராணம் மற்றும் கம்பராமாயணம் ஆகிய இலக்கியங்களில் காணப்படும் 16 ஒற்றுமைகளை விளக்கும்  ஒப்பிலக்கிய ஆய்வுக் கட்டுரையை வழங்குகிறார்  அமிர்தலிங்கம் பிள்ளை. இக்கட்டுரை  நிறைவுற்றது]

4. தஞ்சை ஸ்ரீபிரகதீசுவரர் - பெருவுடையார்கோயில் என்ற பெரிய கோயில்
ஜெ. எம். சோமசுந்தரம் பிள்ளை
[தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் சோமசுந்தரம் பிள்ளை  அவர்கள் தஞ்சை பெரிய கோவிலின் வரலாறு, கோவிலின் கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி மிக விரிவாக இக்கட்டுரையில் விளக்குகிறார், இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

5. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ...]

6. வையகத்தே வானகம்
A. சிதம்பரநாதஞ் செட்டியார்
[இவ்வுலகில் இல்லறக் கடன்களை செவ்வனே ஆற்றி வாழும் ஒருவர் வானகம்  தரும் எனச் சொல்லப்படுகின்ற  இன்ப வாழ்வை இந்த வையகத்திலேயே அடையலாம்  என்றக் கருத்தை "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்" குறள் முதற்கொண்டு, மேலும் பல திருக்குறள்களின் உதவியுடன் விளக்கும் கட்டுரை]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment