Monday, June 6, 2016

தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 7

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 7
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 7

_________________________________________________________

1.தம்பிரான்றோழரும் தனஞ்செயனும்
இ. மு. சுப்பிரமணியபிள்ளை
[சிவன் அர்ச்சுனனுக்கு அருளியதை சுந்தரர் நேரில் கண்டிருக்க  வாய்ப்பில்லையென அ. சிதம்பரனார் முன்னர் வரலாற்றின் அடிப்படையில் வைத்த மறுப்புரைக்கு விளக்கமளிக்கிறார் சுப்பிரமணியபிள்ளை. தொன்மக் கதையின்படி சுந்தரர் கயிலையில்   சிவனுடன் என்றும் உடனிருந்து தொண்டு செய்தவர் என்பதால் அவர் பார்த்தனுக்கு பாசுபதத்தினை சிவன் அருளிய நிகழ்வின் பொழுதும் உடனிருந்தவரே என்பதை உணரலாம் என்பது சுப்பிரமணியபிள்ளை  தரும் விளக்கம்.  எனவே தனது பழைய நினைவுகளை சுந்தரர் பாடினார் என்பதும் ஒரு தொன்மம், பாடலின்படி சரியே என்பதும் இவர் தரும் விளக்கம்]

2.அளவை நூன் முன்னுரை - ஆராய்ச்சி நூல் கற்கும் முறை
T. இராமநாத பிள்ளை
[முறையாகச் சிந்திக்கப் பழக்குவதே அளவை நூலின் முக்கிய நோக்கம். இது தருக்க நூல்களின் முறை. ஆய்வு நூல்களின் ஆய்வு  முறைகளும், அவை காட்டும்  முடிவுகளும்  போலியாக இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றையும் ஆராய வேண்டும். ஆராய்ச்சி என்பது கற்றலை இலகுவாக்க்கும் நோக்கில்  முறையாக  வகுத்த அறிவு.  வாதித்து தம் கொள்கைகளை நிலைநாட்ட பண்டைக் காலத்தில் தமிழர் அளவை நூலைக் கற்றனர். பயிற்சியால் பெறும் அறிவுக்கும் ஆய்வால் பெறும் அறிவுக்கும் வேறுபாடு உண்டு. பயிற்சிக் கல்விக்கு ஆய்வே அடிப்படை.  பயிற்சி வாழ்க்கைக்குப் பயன் தரும், ஆய்வு அறிவை வளர்க்கும்  என்றக் கருத்துக்களை முன்வைத்து ஆய்வு முறையை விளக்கும் இக்கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]

3. வள்ளல் பேகன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் கொடைமடத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவன் மனைவி கண்ணகியை பேகன் சினந்து வெளியேற்ற, அவனைப் பிரிந்தாலும் அவனையே நினைந்து  காட்டில் தனியே வாழ்ந்து வருந்திய கண்ணகியைக் கண்டு  இரங்கிய  தமிழ்ப் புலவர்கள் அவர்களை இணைக்க மேற்கொண்ட முயற்சி நாடகமாக்கப்பட்டுள்ளது. இது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் மாணவர்கள் நடிப்பில் அரங்கேறிய நாடகம்]

4. துருக்கர் மொழியும் தமிழும்
சாமி. வேலாயுதம் பிள்ளை
[துருக்கி குடியரசு தமது  பத்தாம் ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வேளையில், இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த கமால் பாஷா கொண்டு வந்துள்ள துருக்க மொழி சீர்திருத்த முறை பற்றிய விளக்கம் தருகிறார் வேலாயுதம் பிள்ளை. அராபிய, பாரசீக, பிற அயல்மொழிச் சொற்கள் 75 விழுக்காடுவரை நிரம்பிவிட்ட துருக்கிய மொழியில் அயல்மொழிச் சொற்கள் அனைத்தும் நீக்கப்பட்டு தாய்மொழிச் சொற்கள் புகுத்தப்படும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. படிப்படியாக நாளிதழ்வழி தக்க பழஞ்சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவையாவும் தொகுத்து அகராதி உருவாக்கப்பட்டு இக்கால இளைய தலைமுறையினருக்கும் இருபதாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல் விளங்காத அளவிற்கு வியக்கும் வகையில் மொழி உருமாற்றம் பெற்று புத்துயிர் பெற்று விட்டது. கமால் பாஷா கொணர்ந்த மொழி சீர்திருத்த முறைகள்   தமிழர்கள் அறிந்து பின்பற்றத் தக்கவை என்பது வேலாயுதம் பிள்ளை அவர்களின் கருத்து.  ]

5. சாக்கைக் கூத்து
T. M. இராமச்சந்திரன் செட்டியார்
[தமிழில் நாடக நூல்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தாலும், தொடர்ந்து கூத்துகள் அக்காலத்திலிருந்து இக்காலம் வரை நிகழ்த்தப்பட்டாலும், தமிழ்  இலக்கிய நூல்கள் போல இசை நூல்களோ நாடக நூல்களோ நமக்குக் கிடைக்கவில்லை என்று கூறும் இராமச்சந்திரன் செட்டியார், சோழர்கால ஆலயக் கல்வெட்டுகளின் வழி கோவில் திருவிழாக்களுக்கு நடத்தப்பட்ட நாடகங்கள், நடத்தப்பட்ட கூத்துகளின் வகைகள், கூத்தாடியவர்களுக்கு  வழங்கப்பட்ட ஊதியம் போன்ற கல்வெட்டுத் தகவல்களை அளிக்கிறார்]

6. வேசையர் உறவு நாச காரணமே
பெ. இராமாநுஜ ரெட்டியார்
[கணிகையர் உறவு பழிமட்டுமல்ல பாவமும் என்பதை அறிந்தும் தனது குடும்பத்திற்குக் கேடு செய்து, மனைவி கண்ணகியைப்  பிரிந்து பொதுமகளுடன்   உறவு கொண்ட மன்னன் பேகனை அவனது புலவர் பெருமக்களான கபிலர், பாணர், அரிசில் கிழார் போன்ற புலவர்கள்   மனம் மாற்றம் செய்வித்த நிகழ்வை விவரிக்கிறார்  இராமாநுஜ ரெட்டியார்]

7. மதிப்புரை
இதழாசிரியர்
[தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட 1934 ஆம் ஆண்டின் திருக்குறள் நாட்குறிப்பு (Diary) நூலுக்கு மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment