Saturday, June 11, 2016

தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 12

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 12

_________________________________________________________

1.  தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம், 23  ஆம்  ஆண்டுவிழா
இதழாசிரியர்
[மார்ச் 16-18,  1934 நாட்களில்,  உ. வே. சா. அவர்களது தலைமையில் கொண்டாடப்பட்ட தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்  23  ஆம்  ஆண்டுவிழா நிகழ்வுகள் பற்றியத் தொகுப்பு.  2,049 பேர் விழாவில் கலந்து கொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தார்கள்.  மூன்று நாட்கள் நடைபெற்ற விழாவில், புகழ்பெற்ற அக்காலத் தமிழறிஞர் பலரும் உரை நிகழ்த்தியுள்ளார்கள்.  முதல்நாள் விழா மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் பிறந்தநாள் விழாவாக,  அவரது தமிழ்ப் புலமையையும், தமிழ்ப் பணியையும், சிறப்புக்களையும்  போற்றும் விதமாகக்  கொண்டாடப்பட்டுள்ளது]

2.  விழாத்தலைவர் உ. வே. சா. அவர்களுக்கு வாசித்தளித்த வரவேற்புப் பாடல்
[பெரியோனே வருக, தமிழ்ப் பேறே வாழி என்றதொரு பாடல்]

3. வள்ளல் பேகன் - ஒரு சிறு நாடகம்  (தொடர்ச்சி...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் கொடைமடத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவன் மனைவி கண்ணகியை பேகன் சினந்து வெளியேற்ற, அவனைப் பிரிந்தாலும் அவனையே நினைந்து  காட்டில் தனியே வாழ்ந்து வருந்திய கண்ணகியைக் கண்டு  இரங்கிய  தமிழ்ப் புலவர்கள் அவர்களை இணைக்க மேற்கொண்ட முயற்சி நாடகமாக்கப்பட்டுள்ளது. இது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் மாணவர்கள் நடிப்பில் அரங்கேறிய ஒரு சிறு நாடகம்.  நாடகத்தின் இப்பகுதியில்  அரிசில்கிழார், பரணர், கபிலர் ஆகியோர்  பேகனுக்கு அறிவுரை கூறுவதும், பேகன் அப்பெரியோர்களது ஆலோசனையை ஏற்று நடப்பதாக உறுதி அளிக்கும்  காட்சி இடம் பெறுகிறது.  இந்நாடகம் நிறைவுற்றது. ]

4. ஐங்குறு நூறு (தொடர்ச்சி...)
S. தெண்டபாணி தேசிகர்
[எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறு நூறு நூல் ஒரு 'உயிரியல்நூல்' போல அறியத்தரும் விலங்கு, தாவர, இயற்கை நிகழ்வுகள்; காலங்களின் இயற்கை, உவமச் சிறப்பு, நயமுடைய பகுதிகள், பாடலாசிரியர்கள்  பற்றியக் குறிப்புக்கள், நூல் தொகுத்தார் தொகுப்பித்தார் வரலாறு,   ஆகியவற்றை இப்பகுதியில்  விவரித்துள்ளார்  தெண்டபாணி தேசிகர்.  இக்கட்டுரை நிறைவுற்றது]

5. நக்கீரா, நற்கீரரா? (தொடர்ச்சி...)
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[நக்கீரர் என்னும் சொல்லின் தன்மையை ஆராயும் கட்டுரை. 'நல்' என்ற அடைமொழி முன்னொட்டாக வரும்பொழுது கீரன் என்ற பெயரை  'நற்சேந்தனார்' மற்றும் 'நற்றிணை' போன்று  'நற்கீரர்' என்று எழுதுவதே, பண்டையோர் எழுதி  வந்த வழக்கத்தினை ஒத்திருக்கும். நக்கீரர் என்பது வடமொழிப் பெயரன்று, தமிழ்ப்பெயரே.  நற்கீரன் மருவி நக்கீரன் ஆனது என்கிறார் வேங்கடராசலு ரெட்டியார்]

6. ஆழ்வார் பாரதமும் - சோழர்களும் (தொடர்ச்சி...)
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர் தமது பாரதத்தில் பாண்டவர் அஞ்ஞாதவாசம் முடிந்து வெளிப்பட்ட பின்னர் தமிழக வேந்தர்கள் அவர்களை விராடநகரத்தில் சந்தித்தார்கள்,  பாரதப்போருக்குச்  சோழர் படை கொடுத்து உதவினார்கள் (கலிங்கத்துப் பரணியிலும் கூறப்பட்டவாறு), துரியோதனனுக்கு உதவிய சோழன் போரின் எட்டாம் நாள்  வீமனால் கொல்லப்பட்டான், சோழர்கள் வடநாட்டிற்குப் படையெடுத்துச் சென்று, வென்று தங்கள் யானைப்படையைக் கங்கையில் நீரிருந்தச் செய்தார்கள்  என்பது போன்ற  செய்திகள் இடம்பெறுவது காட்டப்பட்டுள்ள இக்கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]

7. தமிழன்பர் மாநாடு
கே. வி. கிருஷ்ணஸ்வாமி ஐயர்
[பதிப்பகத்தாரும், நூலாசிரியர்கள் உட்பட  நூல் விற்பனையில் பலவகையிலும் தொடர்புள்ளோர் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழகத்தில் தமிழ்நூல்களை அதிகரிக்க வேண்டும், அவை மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற குறிக்கோளில் சென்னையில் கூட்டிய முதல் தமிழன்பர் மாநாடு பற்றிய அறிக்கை.   அறிக்கை தரும் செய்தியின்படி, தமிழக மக்கட்தொகையுடன் ஒப்பிடும்பொழுது அக்காலத்தில் தமிழில் வெளிவந்த நூல்கள் மிகக் குறைவு, அவற்றிலும் பலரும் பயன்பெறும் வண்ணம்  எளியதமிழில்,  பலவகை செய்திகளைத் தந்து மக்களின் பொதுஅறிவினை வளர்க்கும் நூல்கள் மிகவும் குறைவு எனத் தெரிகிறது.  இங்கிலாந்தில் துவக்கப்பட்ட "உபயோகமான அறிவைப் பரப்பும் சங்கம்' முன்னெடுத்த முயற்சி போல தமிழகத்திலும் தமிழார்வலர்கள் செய்ய விருப்பம் கொண்டிருந்தது தெரிகிறது. இதன் அடிப்படையில் தமிழ்மொழியிலும், தமிழ்நூல்கள் வளர்ச்சியிலும்  அக்கறையுள்ளோர் கருத்துக்களை வரவேற்றுள்ளார்கள் மாநாட்டுக் குழுவினர்]

8. 1916 அக்டோபரில் துவக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 17 ஆம் ஆண்டின் (1933)  ஆண்டறிக்கை
சிவ. குப்புசாமி
[தமிழ்க் கல்லூரியின் தலைமை ஆசிரியர் சிவ. குப்புசாமி அவர்கள், அந்த ஆண்டு நிகழ்ந்த நடவடிக்கைகளைத் தொகுத்து விரிவான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளார்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment