Sunday, June 19, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 8

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 8
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 8

_________________________________________________________

1. அகநானூற்று உரை
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[பொருளீட்டும் வண்ணம் பிரிந்து பாலை வழியே தனித்துச் சென்ற தலைவன் தன்னையும் அழைத்துச் சென்றிருந்தால், தலைவனும் தனியே இரவைக் கழிக்கத் தேவையிருந்திருக்காது, தானும்  அழுது தவித்துப் புலம்பத் தேவையிருந்திருக்காது என்று தலைவி தனது மனக்குறையைத் தோழியிடம் சொல்வதாக,  "வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்"  எனத் துவங்கும்  ஔவை பாடிய  அகநானூற்றுப் பாடல் (11)  குறித்து இக்கட்டுரையில் விளக்கம் தருகிறார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை]

2. ஆந்தை என்னும் தொகை விரியுமாறு
ஆ. சிவசுப்பிரமணியன்
["ஆந்தையைப் பற்றிய ஐயம்" என்று "செந்தமிழ்" பத்திரிக்கையில்  வெளியான கட்டுரைக்கு; "ஆதனாகிய தந்தையை உடையவன் அல்லது ஆதனைத் தந்தையாக உடையவன்" என அன்மொழித் தொகையால் பொருள் கொள்ளுவதே பொருந்தும் என விளக்கம் அளிக்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன்.  மேலும் விரிவாக; சாத்தந்தை, எந்தை, பூந்தை, எயினந்தை, கீரந்தை மனைவி, கீரன்றாய், கொற்றங்கொற்றன், நம்பிமகன், நங்கை கணவன், கொற்றந்தை எனப் பல பெயர்களை எடுத்துக்காட்டாகக் கொண்டும், தொல்காப்பியம் எழுத்ததிகாரம்  சூத்திரங்களைக்  ( 347-350) கொண்டும் பொருள் கொள்ளும் முறையை  விளக்குகிறார் கட்டுரை ஆசிரியர். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை] 

3. தமிழகத்து உழவின் நலமும்  வாணிகத்தின் சிறப்பும்  (தொடர்ச்சி ...)
K. சோமசுந்தரம் பிள்ளை
[அக்காலத் தமிழர்கள் சர்க்கரை மற்றும் உப்பு வியாபாரங்களில்   ஈடுபட்டிருந்தது; கடியலூர் உருத்திரங்கண்ணனார்  எழுதிய சங்ககாலத்துத் தமிழ் நூல்களான   பட்டினப்பாலை மற்றும் பெரும்பாணாற்றுப்படை ஆகியவை தமிழர்களின் கடல் வணிகச் சிறப்பைக் கூறும் செய்திகள்; பெரும்பாணாற்றுப்படை பாடல் வரிகள் (79-84)  'பெருவழிக் கவலை காக்கும் வில்லுடை வைப்பு' என பெருவழிகளில் காவல் செய்த வில் வீரர் படையின்  பராமரிப்பிற்காகச் சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தமை; தமிழர்கள் பாலை  வழி வணிகச் செலவிற்காக ஒட்டகம் பயன்படுத்தியதாக தொல்காப்பியம் காட்டும்  (மரபியல் சூத்திரம் 18) குறிப்பு,  தமிழக மன்னர்கள் வாணிகத்தைப் போற்றி அது சிறக்க உதவிகள்  செய்தது; சிறந்த வணிகர்களுக்கு "எட்டி" என்ற பட்டமும், "பொற்பூ" விருதினையும் அளித்துச்  சிறப்பித்தது; உலகின் பல இன மக்களும் வணிகத்திற்காகத் தமிழகம் வந்ததற்கான இலக்கியச் சான்றுகள்; தமிழக மன்னர்கள் மாற்றார் வணிக  மரக்கலங்களை தமிழகக் கடல் பகுதிகளில் செல்ல விடாது கட்டுப்படுத்தி வணிகத்தில்  ஆதிக்கம் செய்தது  என பண்டையத் தமிழர்களின் வணிகச் சிறப்பிற்கு தமிழிலக்கியச் சான்றுகள் கொடுக்கிறார் சோமசுந்தரம் பிள்ளை.  இக்கட்டுரை நிறைவுற்றது]

4. தம்பிரான்றோழர் தேவாரம்  (தொடர்ச்சி ...)
இ. மு. சுப்ரமணிய பிள்ளை
[தம்பிரான் தோழர் சுந்தரர் தனது தேவாரப்  பாடல்களில் திருமாலையும், நான்முகனையும் பற்றி குறிப்பிடும் பகுதிகளையும், மாலவனும் நான்முகனும் சிவனின் அடிமுடி காண  முயற்சி செய்து அடைந்த தோல்வி குறித்த  தொன்மக் கதை  இடம்பெறும்  பகுதிகளையும் கட்டுரையின் இப்பகுதியில் தொகுத்தளிக்கிறார்  சுப்ரமணிய பிள்ளை. இக்கட்டுரை  தொடர்கிறது]

5.  கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[இரண்டாம் அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, தாட்டந்தங்களின் பொருள் நிலை, தன்மை, ஈதல் ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

6. சோழன் கரிகால் வளவன் - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[ தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை சோழன் கரிகால் வளவனின்  வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது. நாடகத்தின் இப்பகுதியில், உறையூர் சிறையில் இருந்து கரிகாலனை அவனது மாமா இரும்பிடத்தலையார் தப்புவிக்கும் காட்சி இடம் பெறுகிறது. சிறையில் கரிகாலன் "மாசில் வீணையும் மாலை மதியமும்" எனத் தொடங்கும் பிற்கால அப்பர்  வழங்கிய ஐந்தாம் திருமுறை பாடலைப் பாடுகிறார்!   இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment