Wednesday, June 22, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 11

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 11

_________________________________________________________

1. கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை -  இருபத்துநான்காம் ஆண்டுவிழா
இதழாசிரியர்
[1935 ஆண்டு பிப்ரவரியில் இரு நாட்கள் நடந்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்  இருபத்துநான்காம் ஆண்டுவிழாவிற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சிக் குழுத்தலைவர் ரா. இராகவையங்கார் தலைமை ஏற்றார்.  விழாத் தலைவர் மீது R. வேங்கடாசலம் பிள்ளை இயற்றிய வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டது. தலைவரின் உரையைத்தொடர்ந்து S. சோமசுந்தரபாரதியார், T.P. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, நீ. கந்தசாமிப் பிள்ளை, J.M. சோமசுந்தரம் பிள்ளை, திரு.வி.க., பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஆகிய தமிழ்ப் பெரியோர்களும் உரையாற்றியுள்ளார்கள்]

2. கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை -  இருபத்துநான்காம் ஆண்டுவிழா
சர்க்கரை இராமசாமிப்புலவன்
[இராமசாமிப்புலவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெரியோர்களை வாழ்த்திப் பாடிய பாடல்]

3. வீரசோழிய உரையாசிரியர் காலம்
E. R. நரசிம்ம ஐயங்கார்
[வீரசோழிய உரையாசிரியர் வாழ்ந்த  காலத்தைக் கணிக்கும் கட்டுரையின் இப்பகுதியில்; வீரசோழிய உரையில் குறிப்பிடப்படும் மாந்தர்களின்/மன்னர்களின் காலத்திற்கு பிற்பாடு இவ்வுரை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில், இலக்கிய, கல்வெட்டு சான்றுகள் மூலம் நூலில் இடம்பெற்றோரின் காலங்கள் ஆராயப்படுகிறது. வீரசோழிய உரை எழுதப்பட்ட காலம் 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது கட்டுரை ஆசிரியரின் முடிவு]

4. ஆழ்வார் பாரதமும் பண்டைத்தமிழ் நூல்களும்
ம. வி. இராகவன்
[வில்லிபுத்தூரர்  பாரதத்தை பல்வேறு கோணங்களில் ஆராயும் ம. வி. இராகவன், இம்முறை பண்டைத்தமிழ் நூல்களுடன் ஒப்பிடுகிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் கருத்துக்களை பிற்காலப் புலவர்கள் தங்கள் படைப்புகளில் எடுத்தாள்வதும்  வழக்கமே. அவ்வாறு, வில்லிபுத்தூரர் தாம் எழுதிய  பாரதத்தில் சிந்தாமணி, நாலடியார்,  பொருண்மொழி, கந்தபுராணம், திருக்குறள் கருத்துக்களை எடுத்தாண்ட பகுதிகளைச் சுட்டுகிறார் ம. வி. இராகவன். இக்கட்டுரை  தொடர்கிறது]

5. சாத்தனார் கோயில்கள் - கல்வெட்டால் அறிந்த உயரிய செய்தி
வை. சுந்தரேச வாண்டையார்
[தமிழ்மக்கள் தொன்றுதொட்டு வணங்கும்  தெய்வம் சாத்தனார். இக்காலத்தில், ஐயன், ஐயனார் என்ற பெயருடன் வழங்கப்படும் சாத்தனார் கோவில் உள்ள இடங்களான காப்பியக்குடி, பிடவூர் ஆகிய இடங்களைப் பற்றி ஆராய்கிறார் சுந்தரேச வாண்டையார்.

சிலப்பதிகாரத்தில் சாத்தனாருக்கு கோவில் அமைத்துவழிபடும் செய்தியைத் தரும் தொன்மக் கதை ஒன்று உள்ளது. அதில் மாயக்குழந்தையாகத் தோற்றம் கொண்டு சாத்தனார் வளர்ந்தது (வரந் தருகாதை 83 ஆம் வரி) 'காப்பியத் தொல்குடி' என்ற ஊர்  எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வூர் இக்கால சீர்காழிக்கருகில் உள்ளது, அங்கு சாத்தனார் கோவில் இன்றும் உள்ளது.

மற்றொரு செய்தி, திருத்தொண்டர் புராணத்தின்  வெள்ளானைச் சருக்கத்தில் காணப்படுகிறது. இங்கு 'திருப்பிடவூர்' என்ற ஊர் குறிப்பிடப்படுகிறது. இவ்வூர் திருச்சியின் அருகில் பிச்சாண்டார் கோவிலில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

புறநானூற்றின் 395 ஆம் பாடலின் பாட்டுடைத்தலைவன் பெயர் சாத்தன் என்ற குறிப்பும் காணப்படுகிறது. அப்பாடலின் 19-21 வரிகளில், 'சோழநாட்டுப் பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன்' என்று கூறப்படுகிறது. இவ்வூர்க் கோவிலின் தெய்வமான சாத்தனின்  பெயரே பாட்டுடைத் தலைவனுக்கும் வைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் உ.வே.சா. தனது குறிப்பில் எழுதியுள்ளார். இவ்வூர் 'திருப்பட்டூர்' என வழங்கப்படுகிறது. கல்வெட்டுகள் இந்த ஊரை பிடவூர், நாட்டுப் பிடவூர் எனக் குறிப்பிடுகின்றன. இங்கும் ஐயனார் கோவில் உள்ளது. அதனால், புறநானூற்றுப் பாடல் மற்றும் பெரியபுராணம் கூறும் பிடவூர் இவ்வூராகவே இருக்கலாம் என்பது சுந்தரேச வாண்டையார் அவர்களின் கருத்து.

6. திருக்குறணுதலிய நெறிமுறை - Basic principles of Morality as expounded in Thirukkural
K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை, உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் ஒழுக்கம் மட்டுமே. நல்லொழுக்கச் செயல்கள்  உயர்வையும், தீயொழுக்கச் செயல்கள் தாழ்மையையும் தரும் என்பது குறள் தரும் கருத்து. எக்குடியில் பிறந்தாலும் , எத்தொழில் செய்தாலும் ஒழுக்கமுடையவர் மட்டுமே உயர்ந்தவர். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல், ஒழுக்கமுடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்பதை வள்ளுவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். நல்லொழுக்கங்கள் யாவை, அறங்கள் யாவை என்பதைப் பல குறள்கள் விளக்குகின்றன என்கிறார் சோமசுந்தரம் பிள்ளை. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

7. சோழன் கரிகால் வளவன் - நாடகம் (தொடர்ச்சி ...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழக மன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் இம்முறை சோழன் கரிகால் வளவனின்  வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
நாடகத்தின் இப்பகுதியில், வெண்ணிக் குயத்தியார் தோன்றுகிறார். இந்நாடகத்தின் காட்சிகள் தொடரும்...]

8. தமிழ்ச் செய்திகள் பகுதி
இதழாசிரியர்
[கரந்தைத் தமிழ்ச்சங்கத்திற்கு நன்கொடை நல்கியவர்களுக்கு நன்றி கூறப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment