Friday, June 10, 2016

தமிழ்ப் பொழில் (1933-1934) துணர்: 9 - மலர்: 11

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934) துணர்: 9 - மலர்: 11
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

ஒன்பதாம் ஆண்டு:   (1933-1934)
துணர்: 9 - மலர்: 11

_________________________________________________________

1.  இந்திய வேளாண்மைக் கடன்
B. N. ராஜன்
[வறுமை    இந்தியப் பொருளாதாரத்தின் சிறப்பியல்பு, கடன் அச்சிறப்பின் நடு சூத்திரம். கடனாளிகளில் பலர் உழவர்களே.  70% இந்தியர் உழவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள், அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடனில் இருந்து மீளுவதில்லை.  நாட்டை முன்னேற்றும் திட்டத்தில் வேளாண் கடனை நீக்குவது ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.  இந்திய விவசாயிகள் தொழிலை அபிவிருத்தி செய்யக் கடன் வாங்குவதில்லை, சொந்த  செலவுகளுக்காகவே   கடன் படுகிறார்கள்.   பிற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, இயற்கைப் பேரிடர் முதற்கொண்டு, பழைய உழவு முறை எனப் பல காரணங்களால் அவர்கள் சாகுபடியும் அளவில் குறைவு,   அதற்கும் சரியான விலை கிடைப்பதில்லை.  தொழாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கத் தொழிலாளர்கள் சங்கம்  போன்ற  அமைப்பு இருப்பது போல  உழவர்களுக்கு உதவும் அமைப்பும் கிடையாது என்பதால் அரசு அவர்கள் வாழ்வில் தனி அக்கறை செலுத்த வேண்டும் என்கிறார் கட்டுரை ஆசிரியர், இது ஒரு தொடர் கட்டுரை ]

2. ஒருபழந் தனிப்பாடல்
S. இராமச்சந்திரன்
[செல்வக்குடியில் பிறந்த ஒருபெண் கணவன் வீட்டில் வறுமையில் வாடும்பொழுது, மற்றொரு பெண் கணவனுடன்  உனது  பிறந்தகம் சென்று வாழ்வாயாக எனக் கூற, அப்பெண் நான் கணவனுடன்  பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை, பிறந்தக வாழ்வு எத்தகைய செல்வச் செழிப்பு கொண்டிருந்தாலும் அது எனக்குத் தேவையில்லை. கணவருடன் வாழும் இந்த வாழ்வே போதும் என்று மறுமொழியளிக்கும் பழந்தமிழ்ப்பாடல் ஒன்று]

3. ஐயவினா - இறையனார் களவியலுரை
மி. பொ. இராமநாதஞ் செட்டியார்
[உரையாசிரியர் தன்னை 'யானும்' எனக்குறிப்பிடாது 'கணக்காயனார் மகனார் நக்கீரனாரும்'   என்று படர்க்கையில் குறிப்பதற்குக் காரணம் விளங்கவில்லை என்கிறார் இராமநாதஞ் செட்டியார்]

4. ஐங்குறு நூறு
S. தெண்டபாணி தேசிகர்
[எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறு நூறு பற்றிய அறிமுகம், ஐந்து திணைகளையும் விளக்கும் ஆறடிகளுக்கும் குறைவான, நூறு நூறு அகவற்பாக்களைக் கொண்ட நூலின்  அமைப்பு, அதன்  நுதலிய பொருள், இந்நூலால் அறியப்படும் வழக்கங்களிற் சிலவற்றையும் பட்டியலிடுகிறார் தெண்டபாணி தேசிகர்]

5. வள்ளல் பேகன் - ஒரு சிறு நாடகம்  (தொடர்ச்சி...)
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[மயிலுக்குப் போர்வை தந்த பேகனின் கொடைமடத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவன் மனைவி கண்ணகியை பேகன் சினந்து வெளியேற்ற, அவனைப் பிரிந்தாலும் அவனையே நினைந்து  காட்டில் தனியே வாழ்ந்து வருந்திய கண்ணகியைக் கண்டு  இரங்கிய  தமிழ்ப் புலவர்கள் அவர்களை இணைக்க மேற்கொண்ட முயற்சி நாடகமாக்கப்பட்டுள்ளது. இது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் மாணவர்கள் நடிப்பில் அரங்கேறிய ஒரு சிறு நாடகம் ... தொடர்கிறது.  நாடகத்தின் இப்பகுதியில்  பேகனின் கொடைமடத்தைக் குறைத்து மதிப்பிட்ட அவன் மனைவி கண்ணகியை பேகன் சினந்து வெளியேற்றும் காட்சி இடம் பெறுகிறது]

6. நக்கீரா, நற்கீரரா?
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[நக்கீரர் என்னும் சொல்லின் தன்மையை ஆராயும் கட்டுரை. ந - என்பது சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல், கீரன் - என்பது பெயர், மிகவும் சிறிய இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

7. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[ ரா. இராகவய்யங்கார்  இயற்றிய 'பாரி வெண்பா' என்ற நூல் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் புலவர் பெருமக்களின் பேரவையில் அரங்கேறிய செய்தியை அறிவித்துப் பாராட்டியதுடன், அந்நூலை பல்கலைக்கழகத்தார் விரைவில் வெளியிட வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
மே மாதத்தில், நெல்லையில் நடக்கவிருக்கும் 'தமிழர் மாநாடு' பற்றிய அறிவிப்பு]


8.  மதிப்புரை
இதழாசிரியர்
சூத்திரகன் என்ற மன்னன் இயற்றிய 'மிருச்சகடிகம்' என்றழைக்கப்படும், பத்து அங்கங்களைக் கொண்ட வடமொழி நாடக நூல், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அவர்களால் 'மண்ணியல் சிறுதேர்' என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலைத் தமிழறிஞர் பலர் பாராட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நூல் வெளியீட்டில் உதவிய மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையின் தமிழ்த் தொண்டும் பாராட்டப் பட்டுள்ளது.  

யாழ்ப்பாணத்து நல்லூர் சுவாமி. ஞானப்பிரகாசர் எழுதிய 'தருக்கச் சாத்திரச் சுருக்கம்' என்ற நூல் பல்கலைக்கழக தமிழ் வித்துவான் தேர்வுக்கேற்ற நூல் எனப் பாராட்டப்பட்டு, பல்கலைக்கழகத்தார் இதைக் கருத்தில் கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

ஆ. பாலகிருட்டிணன் அவர்கள்,   இராமலிங்க சுவாமிகளின் திருவருட்பா கீர்த்தனையின் இரண்டாம் பகுதியை அனைவரும் பயன்பெறும் வகையில் மிகக் குறைந்த விலை பதிப்பாக (12 அணா விலையில்) பதிப்பித்துள்ளார்.  அவரது தமிழ்த் தொண்டு பாராட்டப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment