Wednesday, June 15, 2016

தமிழ்ப் பொழில் (1934-1935) துணர்: 10 - மலர்: 4

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பத்தாம் ஆண்டு:  (1934-1935) துணர்: 10 - மலர்: 4
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பத்தாம் ஆண்டு:  (1934-1935)
துணர்: 10 - மலர்: 4

_________________________________________________________

1. கருதலளவைப் பகுதி I
த. இராமநாத பிள்ளை
[முதல் அதிகாரம்: சிந்தனை வேறு அதனை வெளிப்படுத்தும் மொழிகள் வேறு, சிந்தனையை வெளிப்படுத்த உதவிய ஒலி மொழியானது. யூகம் என்பது சிந்தனையின் அடிப்படை அளவு. யூகம் சொற்களால் வெளிப்படுத்தப்படுகிறது. அச்சொற்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது என்று விளக்கும்  இக்கட்டுரை, ஒரு தொடர் கட்டுரை]

2. பத்துப்பாட்டு - பொருநராற்றுப்படை
மி. பொ. இராமநாதஞ் செட்டியார்
[பாடிப் பரிசில்  பெற விரும்பிய ஒரு பொருநனை, மற்றொரு பொருநன் கரிகால் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்துவதாக முடத்தாமக் கண்ணியாரால் பாடப்பட்ட சங்கப்பாடலின்  இலக்கியம் நயம் பாராட்டுகிறார் இராமநாதஞ் செட்டியார்.  பொருநர் ஏர்க்களம், போர்க்களம், பரணி பாடுபவர் எனப் பலவகையினர்.  இப்பொருநன் போர்க்களம் பாடுவதையும், தடாரிப்பறை வாசிப்பதையும் பழக்கமாகக் கொண்டவன் என்பதைப் பாட்டின் 70-73 வரிகள் காட்டுகின்றன. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை] 

3. தேம்பாவணி (தொடர்ச்சி ...)
ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
[வீரமாமுனிவர் இசைநூலுணர்வு கொண்டிருப்பதை தேம்பாவணி வெளிப்படுத்துகிறது.  உலகிற்கு நீதி கூறும் வகையில் தேம்பாவணியில் பல பாடல்கள் அமைந்துள்ளன.  இவரது பாடல்களில் உவமையழகு சிறந்து விளங்குகிறது.  சீவகசிந்தாமணி  போன்று காப்பிய நடையில் அமையப்பெற்ற சமய நூலான தேம்பாவணியின் பாடல்களின் சிறப்பால், வீரமாமுனிவருக்கு தமிழ்ப் புலவர்கள் வரிசையில் சிறந்த இடம் உண்டு என கால்டுவெல் பாராட்டியுள்ளார்.  தமிழ் கற்பாருக்கு சிறந்த விருந்தாக அமைவது தேம்பாவணி எனக் கட்டுரையை நிறைவு செய்துள்ளார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை]

4. சிலசொற்களின் பொருள்
வே. வேங்கடராசலு ரெட்டியார்
[தமிழகராதியில் பொருள் தரப்பட்டுள்ள; அட்டை, சொன்றி, நாக்கு, வெற்றிலை, தெற்றென, ஊசல் ஆகிய  சொற்களின்  பொருள் மறு ஆய்வு செய்யப்படுகிறது. சொற்களில் "ந்த, த்த" என்பவை "ஞ்ச, ச்ச" என்று திரிவது விளக்கப்படுகிறது]

5. நற்றிணை
ச. தண்டபாணி தேசிகன்
[ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நிலத்தின் இயல்பை விளக்கும் 'நற்றிணை' என்ற தொகை நூலின் பெயர்க்காரணம், நூலமைப்பு ஆகியவற்றை விளக்குகிறார்  தண்டபாணி தேசிகர். அகநானூறு, புறநானூறும் ஐந்குறுநூறு, குறுந்தொகை ஆகியவற்றின் கடவுள்வாழ்த்துப் பாடல்களில்  சிவனை வாழ்த்திப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனார், நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலை மட்டும் திருமாலை வாழ்த்துவதாக அமைத்ததன் காரணம் ஆராயப்படவேண்டிய ஒன்றாகக் கருதுகிறார்.

தொடர்ந்து  நற்றிணை  காட்டும் மக்கள் இயல்பு, பாடல்களில் அக்காலத்தில் மக்களிடம்  சாதிப்பிரிவினை, தீண்டாமை ஆகியன இல்லாதிருத்தலைக் காட்டுவது, மக்களின் உணவு, உடை, வசித்த இல்லங்களின் அமைப்பு, பழக்க வழக்கங்கள், அக்கால மக்கள் கூடும் மன்றங்கள் தகவல் வழங்கும் மையங்களாக இருந்தது, அவர்கள் கடவுளை வணங்கிய  முறை, அவர்கள் விளையாடிய பலவகை விளையாட்டுக்கள், நிலத்தின் இயற்கை ஆகியவற்றை விரிவாக ஆராயும் இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாடு, திருநெல்வேலி - புலவர் மாநாடு 
கா. நமச்சிவாய முதலியார்
[புலவர் மாநாட்டைத் திறந்து வைக்க இசைவு தந்து தமது திறப்புரையை அனுப்பி வைத்த நமச்சிவாய முதலியார் அவர்களால், விழாவில் பங்கு பெற இயலாமல் போனது. அவர் விழாவில் வழங்கவிருந்த உரை தமிழ்ப்பொழிலில் இடம் பெறுகிறது.  தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பு, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், செய்யுள் நடைக்கும் உரைநடைக்கும் தெளிவான வேறுபாட்டுடன் எழுதுதல் தேவை ஆகியவற்றைக் குறித்த தமது கருத்துக்களை நமச்சிவாய முதலியார்  இவ்வுரையில் வழங்குகிறார்]

7. தமிழ்ச் செய்திகள்
இதழாசிரியர்
[அரசுப்பணியில் இருந்து பணிஓய்வு பெற்ற பின்னரும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மாணவர்களுக்கு தன்னார்வத் தொண்டாக மருத்துவ உதவி வழங்கிய மருந்துவினைஞர் (Compounder) ம. கண்ணுசாமிப் பிள்ளை அவர்கள் உடல்நலம் குன்றி மறைந்தார்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment