Saturday, April 30, 2016

தமிழ்ப் பொழில் (1929 -1930) துணர்: 5 மலர்: 11 & 12

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929 -1930) துணர்: 5   மலர்: 11 & 12

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 2 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929 -1930
துணர்: 5   மலர்: 11 & 12
________________________________________________

1. குறிஞ்சிப்பாட்டின் பருப்பொருள்
L. உலகநாத பிள்ளை
[குறிஞ்சித் திணைக்குரிய பொருளினை உணர்த்தும் அகவற்பா பாடல், குறிஞ்சி நிலக் காட்சிகள், குறிஞ்சியின் முதல், கரு, உரிப்பொருள் விளக்கங்கள், உரிப்பொருள் காட்சிகள் ஆகியவற்றின் தொகுப்பு இக்கட்டுரை]

2. உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    நரம்பு மண்டலம்  பற்றிய தகவல்கள் ... தொடர்கின்றன, அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

3. தமிழ்க் கொலை
எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை
[தமிழராய்ப் பிறந்து, தமிழ் பேசி வளர்ந்தும் பிறமொழியைப் போற்றி தம் தாய்மொழி தமிழைப் புறக்கணிப்பதோடு நில்லாமல், தமிழையும் சிதைப்பவரைச் சாடும் கட்டுரை. வடமொழி, ஆங்கிலக் கலப்புடன் தமிழ் எழுதப்படுவது கண்டிக்கப்படுகிறது, பாடநூல்களில் ஆரியக் கொள்கைகளைப் புகுத்தும் எண்ணத்தில் சாதிப்பெருமை உயர்வு தாழ்வு கூறும் கருத்துகள் நுழைக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது]

4. தமிழறிவு குறைந்திருப்பதேன்?
ஊ. சா. வேங்கடராம ஐயர்
[இக்கால மாணவர்கள் ஆங்கிலம் தமிழ் இரண்டிலுமே அறிவு குறைந்தவர்களாகவே இருக்கின்றனர். இருப்பினும் தமிழ் அறிவு குறைந்துவருவதை எடுத்துக்காட்டுகளுடன் சுட்டிக்காட்டி; சூழ்நிலையை ஆய்ந்து தக்க நடவடிக்கை எடுக்கத் தமிழறிஞர்களுக்கு வேண்டுகோள் வைக்கப்படுகிறது]

5. பெண்கல்வியின் இன்றியமையாமை
E.R. அங்கப்பா
[நாட்டின் முன்னேற்றம் கல்வியுடன் தொடர்பு கொண்டது என்று குறிப்பிட்டு, பெண் கல்வி  இல்லாமையால் வரும் கேடுகளை எடுத்துரைக்கும் கட்டுரை]

6. திருவள்ளுவர் திருக்குறள்    (தொடர்ச்சி...)
வ. உ. சிதம்பரம் பிள்ளை
[பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. தொல்காப்பிய இலக்கணத்தைப்  பின்பற்றிய வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் காணப்படுவது போன்று மெய்ப்பொருளை உயர்திணை ஆண்பாலாகக் குறிப்பிட வழியில்லை.  மெய்ப்பொருளை மனித உருவாக, அது தாள் முதலியவற்றை கொண்டதாகக் காட்டுவதும் பொருந்தவில்லை. சொற்குற்றம், பொருட்குற்றம் கொண்ட இக்குறட்பாக்களை வள்ளுவர் இயற்றினார் என்று கூறுவது, வள்ளுவரைப் புலவரல்லர் என்று கூறுவதற்கு ஒப்பாகும். திருக்குறளின் பாயிரத்தில்  கடவுள் வாழ்த்துவான்சிறப்புநீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் அமைக்கப்பட்டவை அல்ல  என்று வ. உ. சிதம்பரம் பிள்ளை கருதுகிறார். ]

7. செந்நீர் (தொடர்ச்சி...)
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
[உயிரை உடலில் இருத்த உதவும் அயம்  "இருத்தயம்"  என்பது வடமொழியில் ஹிருதயம் ஆனது. இதயம் இயங்கும் முறையும், இரத்த ஓட்டமும் விளக்கப்படுகிறது. இது ஒரு தொடர் கட்டுரை]

8.  ஆர்க்காடு
ஒளவை சு. துரைசாமி பிள்ளை
[ஆர்க்காடு நகரின் பழமை, தொன்மம், இலக்கியம் கூறும் தகவல்கள், 'தாலமி'யின் குறிப்பில் ஆர்க்காடு பற்றி காணப்படுகிறது, 1,800 ஆண்டுகளுக்கும் முன்னர் விளங்கிய நகரம் ஆர்க்காடு ]

9. உலாக்கொண்ட மூன்று சோழ மன்னர்கள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[ஒட்டக்கூத்தரால் பாடப்பெற்ற விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் இரண்டாம் இராசராச சோழன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், இக்கட்டுரை  முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை ]

________________________________________________


நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment