Sunday, April 5, 2015

நாடார் குல மித்திரன் - 1922 - டிசம்பர் மாதத்தின் 3 வது இதழ்

வணக்கம்.

நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை 1922ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) மூன்று  வெளியீடுகள் வெளிவந்துள்ளன.


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1922ம் ஆண்டு டிசம்பர் 21  வெளிவந்த இதழ் (மலர் 4 - இதழ் 12)
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில்:

பாரதியார்     "தமிழருக்கு" என்ற தலைப்பில் எழுதிய எழுச்சியூட்டும் கட்டுரை இரண்டாம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
இக்கட்டுரையை மின்தமிழின் இந்தப்பதிவில் படிக்கலாம்

'நாடார்களும் கோயிலும்' என்ற தலைப்பில் ஆரணியில் இருந்து வெளிவந்த 'சகோதயம்' என்ற பத்திரிக்கையில் "தேசாபிமானி" என்ற புனைப்பெயர் கொண்ட ஒருவர்,  திருப்பூரில் நடந்த நாடார்குல மாநாட்டில் எழுப்பப்பட்ட ஆலய நுழைவு பிரச்சனை, கலந்துரையாடல், வரையப்பட்ட தீர்மானங்கள் என்பவனவற்றை விவரித்து எழுதிய  கட்டுரையை நாடார் குலமித்திரன் பத்திரிக்கை தனது மூன்றாம் பக்கத்தில் மறுபகிர்வு செய்துள்ளது. கோயிலுக்குள் நுழைய காங்கிரஸ் உதவாவிட்டால் நாடார்கள் தாங்களே தங்களுக்கு கோயில் கட்டிக் கொள்ள வேண்டும், அதற்காக "தாயதிகளிடம் ஏற்பட்ட சண்டையால் தகப்பனின் சிரார்த்தத்தைக் கைவிடுவது போல" காங்கிரசைப் புறக்கணிக்கக் கூடாது. நாட்டு நலனை கருத்தில் கொள்ளவேண்டும் என அக்கட்டுரையில் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.

இதை "நயவஞ்சக யோசனை" என்றும் , "போலித் தேசாபிமானம்" என்றும் தனது இதழின் ஐந்து மற்றும் ஆறாம் பக்கங்களில்  மற்றொறு நீண்ட கட்டுரை ஒன்றின்  மூலம் நாடார் குலமித்திரன் பதிலடி கொடுத்திருக்கிறது.  ஆக, அக்காலத்தில் கோயில் நுழைவு என்பது  மிகப் பெரும் பிரச்சனையாக நாடார் குலத்தின்பால் இருந்தது தெரிகிறது. அத்துடன் கட்டுரையாளர்
"தேசாபிமானி" 'தானே கேள்விகள்  கேட்டு தானே பதில்கள்  சொல்லிக் கொண்டிருப்பதையும்' "கொட்டை எழுத்தில்" பதிவிட்டுள்ளது  நாடார் குலமித்திரன்.

சாஸ்திரி ஆஸ்திரேலியா சென்று அங்கு வாழும் இந்தியர்களுக்கு சமஉரிமை வேண்டும்  என்று போராடமுயன்றபொழுது, ஒரு  நியூசிலாந்துக்காரர் முதலில்
சாஸ்திரி தனது  நாட்டு மக்களிடம் சமத்துவம் கிடைக்க உழைக்கட்டும் என்று  இடித்துரைத்ததையும் சுட்டிக்காட்டி காந்கிரசின் மெத்தனத்தை தேசாபிமானி புரிந்து கொள்ளட்டும்  என்று சூடான மறுமொழியும் அளித்திருக்கிறது.

கவனத்தைக் கவரும் செய்திகள்  சில:
  • சட்டசபையும் நாடார்களும் பகுதியில்  சௌந்தர பாண்டிய நாடாருக்கு  சட்டசபை தேர்தலில் ஆதரவு கொடுக்கப்படுகிறது.
  • திலகரின் சுயராஜ்ய  நிதி நிர்வாகத்தின் சீர்கேட்டை ஓழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும்  வைக்கப்பட்டுள்ளது.
  • அன்றைய நாடார்குல மக்கள் தொகை 10 இலட்சம், ஆனால் நாடார் குல சங்கத்தில் ஒரு லட்சம் பேர் மட்டுமே உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ளதும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • மாசிலாமணி நாடாரின் "நாலடியார்" நூலுக்கும் "நமது குலத் தொழில் யாது" என்ற விஜயதுரைசாமி கிராமணி எழுதிய நூலுக்கும் மதிப்புரை என்ற பெயரில் நூலறிமுகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அந்நூல்களின்  விலை முறையே எட்டணா, மற்றும்  ஆறணா. 

தொடர்கள்: 
  • ஸ்ரீ கிருஷ்ணலீலை தொடர்கிறது, இம்முறை கன்றுகளைக் கவர்ந்தது விவரிக்கப்படுகிறது.
  • தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையின் ஐந்தாம்  பாகம் இடம் பெற்றுள்ளது.
  • மனனமாலை (ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்) என்ற தொடரும் உண்டு.
  • சில இதழ்களில் அவ்வப்பொழுது தோன்றும் "பழமொழித் திரட்டு" என்ற பகுதி இவ்விதழிலும் உண்டு. இப்பகுதி  வழக்கம் போல அரசியல் செய்திகளை பழமொழி உதவியுடன் சொல்கிறது. "அகப்பை பிடித்தவன் தன்னவனானால் அடிப்பந்தியில் இருந்தால் என்ன, கடைப்பந்தியில் இருந்தால் என்ன", "சுவர்க்கத்திற்குப் போகிற பொது கக்கத்தில் மூட்டை", "பொன் ஊசி என்றாலும் கண்ணில் இடித்துக் கொள்ளலாமா"  "பெயர் பொன்னப்பன்தான் கையில் காசுகூடக் கிடையாது", பொன்னாபரணத்தைகாட்டிலும் புகழாபரணம் பெரிது" ஆகியவை இம்முறை வெளிவந்திருக்கும் பழமொழிகள்.  இப்பகுதியும் பொன்மொழி ஆர்வலர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஆர்வமூட்டும் ஒரு பகுதி.  பொன் ஊசி என்றாலும் கண்ணில் இடித்துக் கொள்ளலாமா என்ற பழமொழி கலால்  வருமானம் வருகிறது என்பதற்காக மதுக்கடைகளை அனுமதிப்பதா?  ***அமெரிக்காவே மதுவை ஒழித்துவிட்டது, இந்திய அரசாங்கமும் மதுவைத் தடை செய்யவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. 

விளம்பரங்கள்:
  • வழக்கம் போல முதல் மற்றும் கடைசிப் பக்கங்கள் விளம்பரப்பக்கங்களாக உள்ளன.  சௌந்தரகாந்தி நூல், ஆநந்தமகிளா, அமரர் புராணம் நூல், கைத்தொழில் போதினி என்ற நூல்களுக்கும்;
  • தேசானுகூலன்  பத்திரிகை, ** தத்துவ இஸ்லாம், தேசோபகாரி  பத்திரிக்கைக்கான விளம்பரங்களும் உண்டு.

*** Prohibition in the United States was a nationwide constitutional ban on the sale, production, importation, and transportation of alcoholic beverages that remained in place from 1920 to 1933 (from wiki)

** 1919ம் ஆண்டில் "தத்துவ இஸ்லாம்" என்ற பெயரில் வெளிவந்த இந்த இதழ் சனவரி 1923 இல் "தாருல் இஸ்லாம்" என பெயர் மாற்றப்பட்டுள்ளது. (from wiki)

நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழிவாசிக்க இங்கே செல்க!அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:தமிழ் மரபு நூலகத்தில்No comments:

Post a Comment