வணக்கம்.
நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை 1922ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மாதம் மும்முறையாக (1, 11, 21 ஆம் தேதிகளில்) மூன்று வெளியீடுகள் வெளிவந்துள்ளன.
நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில் இன்று
1922ம் ஆண்டு டிசம்பர் 1 வெளிவந்த முதலாவது இதழ் (மலர் 4 - இதழ் 10)
இதழ் மின்தொகுப்பில் இணைகின்றது.
இச்சஞ்சிகையின் அன்றைய விலை 2 அணா.
இந்த இதழில்:
- "தன் சரீரமே தனக்கு உதவி" என்ற ஆசிரம போதினியின் நிருபர் கட்டுரை உடலைப் பேணுவதின் தேவையை வலியுறுத்துகிறது.
- தியாகராஜன் அல்லது திறமையுள்ள ஓர் வாலிபன் என்ற தொடர்கதையின் மூன்றாம் பாகம் இடம் பெற்றுள்ளது.
- லாகூர் ச. போ என்பவர் எழுதிய கட்டுரையொன்றில் சென்னை மாகணத்தின் தொழில் நிலை பற்றிய புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் காணப்படும் சுவையான தகவல்கள் தனிக்கட்டுரையாக சற்றே சுருக்கமாகத் தொகுக்கப்பட்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
- ஜெர்மனிக்கும் இங்கிலாந்திற்கும் இடையேயான போரில் நாட்டிற்கு உதவும் பொருட்டு படையில் சேர வேண்டும் என்ற கோரிக்கை ஒன்று நாடார் குல மக்கள் முன் வைக்கப்படுகிறது.
- இங்கிலாந்து அரசின் பிரதம மந்திரிகள் பட்டியலும், அக்கால அமைச்சர்களின் வருமான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது
- கோவையில் நடந்த நாடர்குல தமிழ் மாகாண மாநாட்டில் சாஸ்திரங்களை மாற்ற இயலாது என்று கூறி நாடர்கள் கோவில் செல்வதற்கு தடைகள் கூறிய மேல்குடியினர் எனத் தங்களைக் கருதிக்கொள்வோர் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு கண்டனங்கள் வைக்கப்பட்டுள்ளன. தங்களிடம் ஆதரவு எதிர்பார்க்கும் காங்கிரஸ் நாடார்குலத்தின் கோரிக்கையை நிராகரிப்பதைப் பற்றிய அதிருப்தியும், திரு. வி. க (மிஸ்டர் முதலியார்), ஈ.வெ.ரா ஆகியோரின் தீண்டாமை ஒழிப்பு உரைகள் பயனற்றுப் போனதும் குறிப்பிடப்படுகிறது. காங்கிரசுடன் கொண்ட உறவு பற்றியும், அதன் அரசியல் நடவடிக்கைகள் நாடார்குலத்திற்கு ஆதரவாக இல்லை என்ற கருத்தும் வெவ்வேறு பக்கங்களில், வெவ்வேறு பத்திகளாக, வெவ்வேறு எழுத்தாளர்களால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் தகவல் நிறைந்த இப்பத்திகள் சமூகவியல் ஆய்வாளர்களுக்கு அக்கால சமூகவியலைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம்.
- வாரத்திரட்டு என்ற செய்திகள் தொகுப்பு, குலவர்த்தமானம் என்ற பகுதியில் நாடார் சங்க அறிவிப்புகள், உலக நடப்புகளைப் பற்றிய துண்டு துணுக்குகள், விகடக்கொத்து, பழமொழிகள், குறிப்புகளும் அபிப்பிராயங்களும் போன்ற பகுதிகள் வழக்கம் போல தொடர்கின்றன. இப்பத்திரிக்கையின் முக்கியப்பங்கான நாடார் மக்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்தை முன்னிறுத்தி அதற்குரிய செய்திகள், செயல் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
- வழக்கம் போல முதல் மற்றும் கடைசி பக்கங்கள் விளம்பரங்களால் நிரம்பியும், இடையிடையே சில பக்கங்களிலும் சில விளம்பரங்களும் காணப்படுகின்றன. சௌந்தரகாந்தி நூல், மனோசுந்தரம் நூல், அமரர் புராணம் நூல், கைத்தொழில் போதினி என்ற நூல்களுக்கும் தேசானுகூலன் பத்திரிகை, தத்துவ இஸ்லாம் பத்திரிகை, தேசோபகாரி பத்திரிக்கைகளுக்கனா விளம்பரங்களும் உண்டு.
நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி
வாசிக்க இங்கே செல்க!
அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு: தமிழ் மரபு நூலகத்தில்
No comments:
Post a Comment