Tuesday, July 5, 2016

தமிழ்ப் பொழில் (1935-1936) துணர்: 11 - மலர்: 12

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பதினோறாம் ஆண்டு:   (1935-1936) துணர்: 11 - மலர்: 12
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பதினோறாம் ஆண்டு:   (1935-1936)
துணர்: 11 - மலர்: 12

_________________________________________________________

1. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இம்முறை கிபி 1310  ஆம் ஆண்டிற்குப் பிறகு  ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களின் வரலாறு கொடுக்கப்படுகிறது. மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் மைந்தர்களான சடையவர்மன் சுந்தர பாண்டியனும் சடையவர்மன் வீரபாண்டியனும் பதவிக்காகப் போட்டியிட்டதும், சர்ச்சையில் வலுவற்றுப் போன பாண்டிய நாட்டை மாலிக்காபூர் கொள்ளையிட்டதும்  பாண்டிய அரசின் அழிவுக்கு வழி வகுத்தது.  தொடர்ந்து விசயநகர பேரரசின் படையெடுப்பும் நிகழ்ந்தது.  மகமதியர்கள் விரட்டப்பட்டாலும் பாண்டியர்கள் மீண்டும் நல்ல நிலையில் ஆட்சி புரியவில்லை என்பது கல்வெட்டுச் சான்றுகள் மூலம் தெரிகிறது. இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

2. வள்ளல்  ஆய் அண்டிரன் - ஒரு சிறு நாடகம்
சிவ. குப்புசாமிப் பிள்ளை
[தமிழ்ப்பொழிலில் தமிழகமன்னர்கள் பலரின் வாழ்க்கை வரலாறுகளை நாடக வடிவில் வழங்கிய சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால், இம்முறை வள்ளல்  ஆய் அண்டிரன் வாழ்க்கை வரலாறு  நாடக வடிவில் வழங்கப்படுகிறது.
இப்பகுதியில், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் தோன்றுகிறார்.  ஆய் அண்டிரனைக் காண விழைந்த விறலி ஒருத்தியை தன்னுடன் அழைத்துச் சென்று அவனைச் சந்திக்க உதவ முன்வருகிறார்; அவர்களுக்கும்  குட்டுவன் கீரனார்,  மருதநாகன், துறையூர் ஓடைக்கிழார் ஆகியோருக்கும் ஆய் அண்டிரன் பரிசுகள் வழங்குகிறார் என்ற  காட்சிகள்   இடம் பெறுகின்றன.  இந்நாடகம் நிறைவுற்றது.  வழக்கம்போல இந்த நாடகமும் கல்லூரி ஆண்டுவிழாவிற்காக சிவ. குப்புசாமிப் பிள்ளை அவர்களால் எழுதப்பெற்று, கல்லூரி மாணவர்களால் நடத்திக் காட்டப்பட்டது]

3. பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச்  சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்புரையும், அதன் மேல் செந்தமிழ் பத்திராதிபர் திரு. நாராயணையங்கார் எழுப்பிய தடையும், அதற்கு விடையும்   (தொடர்ச்சி ...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
['பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார்' எழுதிய 'தொல்காப்பியச்  சொல்லதிகாரக் குறிப்பு' என்ற நூலின் மீது கட்டுரை ஆசிரியரின் விமர்சனம்.  அத்துடன், நூலாசிரியர்  சுப்பிரமணிய சாத்திரியார் அவர்களின்  தொல்காப்பிய உரையை ஆதரித்து   நாராயணையங்கார் கொடுத்த மறுமொழியையும் இதில் மறுக்கிறார்.  அதற்கான  மறுப்பின் தொடர்ச்சி ...]

4. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[ - சென்னைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட 'கலைச்சொற்கள்' என்ற நூல் மேல்நாட்டுக் கலைகளைத் தமிழில் பயில உதவும் என்று பாராட்டப்பட்டுள்ளது.
 - வே. வேங்கடராசலு ரெட்டியார் எழுதி, சென்னைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட "கபிலர்" என்ற நூலில், பல தலைப்புகளிலும் கோணங்களிலும் கபிலர் குறித்து ஆய்வு செய்த ஆசிரியரின் ஆய்வுத்திறம் சிறப்பாக அமைந்திருப்பது பாராட்டப்பட்டுள்ளது.
 - ஆறாண்டுகளாகத் தொடர்ந்து அரசியல், சமூகம், தமிழ்மொழி, தமிழர்நாகரிகம் ஆகியவற்றில் பதிவுகளைத்  தாங்கி வெளிவரும் வாரஇதழ் வெளியிட்ட ஈழகேசரி ஆண்டு மடலின் சிறப்பு கண்டு அவ்விதழ்  வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது]

5.  செய்திகள்
  - இம்மாதத்தில் சங்கக் கல்லூரிக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களின் பெயர், வழங்கிய தொகை விவரம் குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
 - இரங்கற்பா:  கரந்தைத் தமிழ்ச் சங்கத்துப் பேரன்பர் கூடலூர் வே. இராமசாமி வன்னியர் மறைவு குறித்து எழுதப்பட்ட இரங்கற்பா
 - இணைப்பு:  தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் - வெள்ளிவிழா விண்ணப்பம் - 25 ஆண்டுகள் நிறைவையொட்டி சங்கம் முன்னெடுக்கவிருக்கும் பல தமிழ்ப்பணித் திட்டங்கள் கொடுக்கப்பட்டு, அவற்றை நிறைவேற்ற மக்களின் செயலுதவியும் பொருளுதவியும் கோரப்பட்டுள்ளது.
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment