Friday, June 5, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - ஜனவரி மாதத்தின் 3 வது இதழ்

வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு ஜனவரி 21  வெளிவந்த மூன்றாவது  இதழ் (மலர் 4, இதழ் 15)  மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...
பக்கம் 1:
சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும், பரமன் குறிச்சி நாடார் உயர்தர எலிமெண்டரி பாடசாலைக்காக நன்கொடை வேண்டுகோளும் வெளியிடப்பட்டுள்ளன
(இவை யாவும் சென்ற இதழிலும் எவ்வித மாற்றமும் இன்றி இடம் பெற்றவையே).

பக்கம் 2:
"தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன்" என்ற தொடரின் எட்டாம் பாகமும், "நம்பிக்கை" என்ற மனவளக்கட்டுரையும் இடம் பெற்றுள்ளன.

விஜயதுரைசாமிக்கிராமணி எழுதிய"குலத்தொழில் யாது?" என்ற (விலை 5 அணா, 64 பக்கம்) நூல் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  அதில் நாடார்களின் பூர்வீகத் தொழில் என்ன என்று வேத கால, சங்க கால இலக்கியப் பதிவுகள் காட்டுவதென்ன என்ற ஆய்வு கொடுக்கப்பட்டுள்ளது எனவும்; பத்தொன்பதாம் நூற்றாண்டு அகராதியில் சாணன் = சான்றோன், ஒரு சாதிப்பிரிவு என்று பதிவான விவரம், பிற்பாடு இருபதாம் நூற்றாண்டு அகராதியில் சாணான் = மரமேறி, கள் விற்பவர் என்று குறிப்பிடும்  அளவிற்கு சாதீய எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது என அந்த நூல் விளக்குவதாகவும் தெரிகிறது. அத்துடன் கம்பராமாயணம், சுந்தரகாண்டம், ஊர் தேடும் படலத்தில் 110* செய்யுளின் துவசர் என்பதற்கு  சாணார் என்ற பொருளை உரைநூல் அளிப்பதாகவும், அவ்வாறு முற்கால உரைகளில் இல்லையென்றும், இவ்வாறு இல்லாத பொருளைத் திணிப்பது புராணப் புரட்டு என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆலையில், மலையின் சாரல் முழையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத, வேற்கணார் குமுதச் செவ் வாய்
வால் எயிற்று ஊறு, தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை- 110


பக்கம் 3 மற்றும் 4:
நாடார்சங்கங்ளின் நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இப்பக்கங்களில்   பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாநாடு நிகழ்வுகள்,  1921 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் 'மீள்பதிவும்' ஆகியவை  இடம் பெற்றுள்ளன.

பக்கம் 5 மற்றும் 6:
வழக்கமான 'பழமொழித்திரட்டு' பகுதி, நாட்டுநடப்பு விவரங்களை பழமொழிகளுடன் இணைத்து வழங்குகிறது. துணுக்குகள் மற்றும்  சங்கச்செய்திகளும் அறிவிப்புகளும் இப்பங்களிலும் தொடர்கின்றன.

பக்கம் 7
இப்பக்கத்தில்  இடம் பெறுவது உலக நடப்புகள் பற்றிய தகவல்கள், குடும்பத்திற்குப் பொதுவான மருத்துவக் குறிப்புகள் சில, நன்கொடை வழங்கியோர் (போஷகப் பிரபுக்கள்) தகவல்கள், எண்ணெய் வித்து வணிகத்தின் தகவல்கள். 

இந்த இதழில் தலையங்கம் எதுவும்  இடம் பெறவில்லை, அத்துடன், தமிழக, இந்திய அரசியல் செய்திகளின் எண்ணிக்கையும் வழக்கத்தைவிடக்  குறைவு. வழக்கமான  சில தொடர்களும் இந்த இதழில் இடம் பெறவில்லை.  இதற்குக் காரணம் இதழின் ஆசிரியர் அயல்நாட்டுப் பயணத்தில் இருந்ததால் எனவும் கருத வாய்ப்புள்ளது.

குறிப்பு: * இதழ் 112 என்று குறிக்கிறது.

நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி




வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:
தமிழ் மரபு நூலகத்தில்

No comments:

Post a Comment