Wednesday, June 17, 2015

நாடார்குல மித்திரன் - 1923 - பிப்ரவரி மாதத்தின் 1 வது இதழ்

வணக்கம்.

நாடார்குல மித்திரன் மின்னிதழ்  1923ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மாதம் மும்முறை (1, 11, 21 ஆம் தேதிகளில்) என  மூன்று  வெளியீடுகளாக  வெளிவந்துள்ளன.


நாடார்குல மித்திரன் மின் சஞ்சிகை வரிசையில்  இன்று ...
1923 ம் ஆண்டு பிப்ரவரி 1  வெளிவந்த முதலாவது  இதழ் (மலர் 4, இதழ் 16)  மின்தொகுப்பில் இணைகின்றது.


இந்த இதழில் ...
பக்கம் 1:
வழக்கமான சௌந்தரகாந்தி நூல்,  அமரர் புராணம் நூல்,  ஆநந்தமகிளா,  நாடார்குல மித்திரன் புத்தகசாலை நூல்களுக்கான விளம்பரங்களும்,  தூத்துக்குடி நவீன சுகபோஜன சாலை உணவு விடுதிக்கான விளம்பரமும் உள்ளன. இவற்றுடன்,  புதிய சேர்க்கையாக "புதிய இங்கிலீஷ் சம்பாஷணைப் புஸ்தகம்" என்ற விளம்பரம் ஒன்று ஆரணி திருநாவுக்கரசு பிரஸ் வெளியீடான மூன்று பாகங்கள் உள்ள இந்த நூலைப் படித்தால் மூன்று மாதங்களில் இங்கிலீஷில் சம்பாஷிக்கலாம் என்று கூறுகிறது.


பக்கம் 2:
வீரமாமுனி எழுதிய "ஸ்ரீகிருஷ்ணலீலை" என்ற தொடரில் தமிழ் வார்த்தைகளுக்குப் பஞ்சமோ பஞ்சம்.  இக்கால 'பண்ணி' தமிழ், 'செய்து' தமிழ் போல சென்ற நூற்றாண்டில் இதே காலக்கட்டத்தில் 'கொண்டு' தமிழ் என்றொரு கொடுமை இருந்திருக்கிறது.

"ஸ்ரீ பலராமகேசவ மூர்த்திகள் கோபால பாலவேஷஸ்வரூடர்களாய் சந்தோஷாதிசயமான மனோற்சாகங்களுடன்சகல பந்துக்களால் செய்யப்பட்ட ஸ்துதிகளைப் பெற்றுக்'கொண்டு' அளவிறந்த பசுக்களை சமரட்சணம் பண்ணிக்'கொண்டு' விளையாடிக்'கொண்டி'ருந்தார்கள்"

பரமன்குறிச்சி பாடசாலை கட்டட நிதிக்காக 1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பலர் நன்கொடை வழங்கிய விவரம் உள்ளது.

"தியாகராஜன் அல்லது திறமையுள்ள வாலிபன்" என்ற தொடரின் ஒன்பதாம்  பாகமும், இலங்கை நாடர் சங்க நிகழ்வு பற்றிய செய்தியும் இப்பக்கத்தில் இடம் பிடிக்கின்றன.


பக்கம் 3:
இப்பக்கத்தில்  நாடார்குல "சங்க விஷயங்கள்" பல இடம் பெறுகின்றன.

பக்கம் 4:
இலங்கை நாடார்குல சங்க செய்திகள் இப்பக்கத்தில்  இடம் பெறுகின்றன.

பக்கம் 5:
பத்திரிக்கை ஆசிரியர் முத்து நாடாரின்  பர்மா சுற்றுப்பயணம் பற்றியும், அங்கு நடைபெற்ற விழா, வரவேற்பு போன்ற தகவல்களும்,  செய்திகள், வாசகர் கடிதங்களும் இப்பக்கத்தில் இடம் பெறுகின்றன.

பக்கம் 6:
உலகச் செய்திகள், உள்நாட்டுச் செய்திகள் மற்றும் சுவையான தகவல்களுக்காக ஒதுக்கப்பட்ட இப்பகுதியில் உள்ள சில தகவல்கள் ...
  • சுவிட்சர்லாந்தில் சீட்டாட்டம் (சூதாட்டம்), பரிசுச்சீட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
  • இங்கிலாந்தில் வெளியாகும் பத்திரிக்கைகளின் தகவலும் அவற்றின் வாசகர்களின் எண்ணிகையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கைகள் குறைந்தது 7 இலட்சம் முதல் அதிகப்படியாக 18 இலட்சம் வாசகர்களைக் கொண்டுள்ளன.  ஆனால் இந்தியாவில் எந்த ஒரு பத்திரிக்கைக்கும் ஒரு இலட்சம் வாசகரகள்  கூடக் கிடையாது
  • உலகின் பல நிலநடுக்கங்களும்  அவற்றில் ஏற்பட்ட  உயிரழப்புகளும் அடங்கிய   தகவல் ஒன்றில், 1737 இல் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தி ஒன்றரை இலட்சம் மக்கள் உயரிழந்ததாகத்  தகவல் இடம் பெற்றுள்ளது.
  • மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு, நாடார்குல மக்களை பனை மற்றும் கள் விற்பனை தொழிலைக் கைவிட்டு உழவு, கைத்தொழில் மேற்கொள்ளும்படி அறிவுரை கூறப்பட்டுள்ளது.

பக்கம் 7:
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கட்டுரை ஒன்றினை கே. கந்தசாமி என்ற கல்லூரி மாணவர் எழுதியிருக்கிறார்.  இது தொடராக வரும் என்ற குறிப்புள்ளது.  திருமங்கலம்,கல்லுப்பட்டி நாடார் வித்யாசாலைக்கு லோயர் செகண்டரி தேரிய ஆசிரியரோ, ஆசிரியையோ தேவை என்றும் குடும்பத்துடன் வரவேற்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  நாடார்குல மக்கள் அளித்த நன்கொடை விவரங்களும் "போஷகப்பிரபுக்கள்" ஆகிய நன்கொடையாளர்கள் பற்றிய தகவலும் இப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளன.


நன்றி: திலகபாமா
மின்சஞ்சிகையாக்கம்: தேமொழி


அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


நாடார் குல மித்திரன் மின் சஞ்சிகை பிற இதழ்களின் தொகுப்பு:


No comments:

Post a Comment