Sunday, January 1, 2017

தமிழ்ப் பொழில் (1937-1938) துணர்: 13 - மலர்: 2

வணக்கம்.

துணர்: 13 - மலர்: 2  (1937-1938) வெளியீடான  தமிழ்ப் பொழில் இதழ்,
மின்னிதழாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பதின்மூன்றாம் ஆண்டு: (1937-1938)   துணர்: 13 - மலர்: 2
________________________________________________________________

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

1. 'கபிலர்' என்னும் நூலின் ஆராய்ச்சி - ந. மு. வேங்கடசாமி நாட்டார்
2. வடநாடு சென்ற தமிழரசர் காலம் (தொடர்ச்சி ...) - மா. இராசமாணிக்கம்
3. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும் (தொடர்ச்சி ...) - சி. கு. நாராயணசாமி முதலியார்
4. ஊண் பித்தியார் - சி. கு. நாராயணசாமி முதலியார்
5.  திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...) - K. சோமசுந்தரம் பிள்ளை
6. திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு  (தொடர்ச்சி ...) - வே. மு. சீனிவாச முதலியார்
7. தமிழ்ச் செய்திகள் - இதழாசிரியர்
8. நூல் மதிப்புரை -  இதழாசிரியர்

வாசிக்க இங்கே செல்க!


நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
________________________________________________

விரிவான உள்ளடக்கம் ...

1. 'கபிலர்' என்னும் நூலின் ஆராய்ச்சி
- ந. மு. வேங்கடசாமி நாட்டார்
[வித்துவான் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதி, சென்னைப் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட 'கபிலர்' என்னும் உரைநூல் குறித்த மதிப்புரையை வழங்குகிறார் ந. மு. வேங்கடசாமி நாட்டார்.  வேங்கடசாமி நாட்டார் அவர்களும் இதற்கு முன்னரே 'கபிலர்' என்னும் உரைநூல் வெளியிட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  வேங்கடராஜுலு ரெட்டியார் தமிழில் வழக்கத்தில் இல்லாத (முகித்தல், அங்கனம், காண்கின்றது, நற்கீரர்) சொற்களைத் தனது நூலில் கையாண்டது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். 'மரபு நிலை திரியிற் பிறிது பிறிதாகும்' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தை மேற்கோள் காட்டி,  இதனை மரபு நிலை திரித்துப் பொருளுணர்ச்சிக்கு  ஊறு செய்யும் ஒரு  செயலாகக் காண்கிறார்.  விரிவான இலக்கண விளக்கமளிப்பதுடன்,  நினைத்தபடி எல்லாம் சொல்லின் உருவை மாற்றினால் அது தமிழன்று, அது பிறிதொரு மொழியாகிவிடும் என்று அறிவுறுத்துகிறார்.]

2. வடநாடு சென்ற தமிழரசர் காலம் (தொடர்ச்சி ...)
- மா. இராசமாணிக்கம்
[கரிகால் சோழன், நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய தமிழ் மன்னர்கள்  ஆரிய மன்னரை வென்று மீண்டதாகத் தமிழிலக்கியங்கள் கூறுகின்றன.  இவர்கள் வடநாடு சென்றிருந்தால் அவர்கள் சென்ற காலம் எதுவாக இருக்கலாம் என ஆராய முற்படுகிறார் கட்டுரை ஆசிரியர். முன்னர்  சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் கி.பி. 166-193 க்கு இடைப்பட்டக் காலமாக இருத்தல் வேண்டும் என்று குறிப்பிட்டார் மா. இராசமாணிக்கனார்.

இப்பகுதியில்  கரிகாலன் வடநாடு சென்ற காலத்தைக் கணிக்கிறார். சங்க நூல்களில் இரு கரிகாலன்கள் கூறப்படுகின்றனர்.  வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையில், இவர்களுள்  வடநாடு சென்ற கரிகாலன் பிற்காலத்தவன், (இவன் நெடுஞ்சேரலாதனைத் தோற்கடித்த கரிகாலன் அல்லன்; அவன் முற்காலத்தவன்.  இதற்கு K. N.சிவராஜ பிள்ளையின் நூலில் இருந்து சான்று கொடுக்கிறார், அந்த  நூலின் சுட்டியும்  இணைக்கப்பட்டுள்ளது, காண்க). இச்சோழன்  வடநாடு சென்ற காலம்...கி.மு. முதல் நூற்றாண்டின் இடைப்பட்ட காலம்.  இக்காலகட்டத்தில் சோழன் ஒருவன் இலங்கையின் மீது படையெடுத்துச் சென்றதை இலங்கையின் மகாவம்சம் நூலில் இருந்தும் அறியலாம். கரிகாலன் இலங்கைப் போரின்  முடிவில் கைதிகளைக் கொணர்ந்தவன் என்பதும் வரலாறு.  எனவே,  உத்தேசமாகக் கரிகாலன் வடநாடு சென்ற காலம்  கி.மு. 60-கி.மு. 20 இடைப்பட்டக் காலமாக இருத்தல் வேண்டும்  என்ற முடிவுக்கு வருகிறார். இது ஒரு தொடர் கட்டுரை. இனி தொடர இருப்பது  இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வடநாடு சென்ற காலம் குறித்த  ஆய்வு.
Chronology Of The Early Tamils, K. N. SIVARAJA PILLAI, B.A. 1932
https://archive.org/stream/chronologyofthee035104mbp#page/n113/mode/2up (see pp.91-94)]

3. தென்பாண்டி நாடும் -- கொற்கை மாநகரமும் (தொடர்ச்சி ...)
- சி. கு. நாராயணசாமி முதலியார்
[பாண்டிய மன்னர்களின் "கொற்கையம் பெருந்துறை"  என்றழைக்கப் பட்ட சிறப்புமிக்க  துறைமுகமாகவும் மற்றொரு  தலைநகராகவும்  விளங்கிய  "கொற்கை மாநகர்" குறித்த வரலாற்றுத் தகவல்களும், கொற்கையை ஆண்ட பாண்டிய  மன்னர்கள், கொற்கையின் முத்துக்கள்  குறித்து சங்க இலக்கியங்கள் முதல் குமரகுருபரர் வரை புலவர்கள் பாடிச்சென்ற செய்திகளையும், அயல்நாட்டு நூல்கள் தரும் செய்திகளையும் தொகுத்து வழங்குகிறார் நாராயணசாமி முதலியார்.

சடையவர்மன் பராக்கிரம  குலசேகர பாண்டியன் காலமான கி.பி.1552 ஆம் ஆண்டு வரை பாண்டியர்களின் அரசிருக்கையாக விளங்கிய  கொற்கை, அதன் பின்னர் ஏற்பட்ட அழிவுகளால் கைவிடப்பட்டது.  பிறகு,   கி.பி. 1588 இல் முடிசூட்டப்பட்ட   குலசேகர பாண்டியனின் இரண்டாவது மகனான  வரதுங்கராம பாண்டிய மன்னனின் அரசிருக்கையாக கரிவலம் வந்த நல்லூர் ஏற்றுக் கொள்ளப்பட்டது.  பண்டைய  அயல்நாட்டு வரலாற்றுப் பயண நூலாசிரியர்களும் தங்கள் நூலில் குறிப்பிட்ட கொற்கையின் சிறப்பை அறிய,   கொற்கைக்கு  அருகிருக்கும் ஊர்களான   ஆதிச்ச நல்லூர், கொட்டாரம், மணப்படை, அக்கசாலை போன்ற இடங்களில் அரசு அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டு தமிழரின் வரலாற்றை வெளிக்கொணர விருப்பம் தெரிவிக்கிறார்   சி. கு. நாராயணசாமி முதலியார், இத்தொடர் கட்டுரை நிறைவுற்றது.]

4. ஊண் பித்தியார்
- சி. கு. நாராயணசாமி முதலியார்
[சங்ககாலத்து நல்லிசைப் புலமை மெல்லியலார் என்றும், ஊர்ப்பித்தியார் அல்லது ஊண் பித்தியார் என அழைக்கப்படும் இப்பெண்பாற் புலவரின் இயற்பெயர் 'பித்தியார்' என்பதாகும். குறுந்தொகை 232, புறநானூறு 251, 252 இவரால் பாடப் பெற்றதாக அறியப்படுகின்றன. இவரது பாடல்கள் குறித்தும், தொல்காப்பிய உரையாசிரியர்கள் 'தாபதவாகை'க்கு இவரது புறப்பாடல்களை எடுத்துக்காட்டாகக் கொள்வதையும் அறியத் தருகிறார்  சி. கு. நாராயணசாமி முதலியார்.]

5.  திருக்குறணுதலிய நெறிமுறை (தொடர்ச்சி ...)
- K. சோமசுந்தரம் பிள்ளை
[திருக்குறள் ஒழுக்க நெறியையும், அன்பையும் அறத்தையும் முதன்மைப்படுத்துகிறது என்பதை எடுத்துக் காட்டும் நோக்கில் சோமசுந்தரம் பிள்ளை  அவர்கள் வழங்கும் கட்டுரையிது.   இத்தொடர் கட்டுரையின் இப்பகுதியில்;  இல்லறம், அரசர்க்குரிய செங்கோன்மை, ஒற்றாடல்  ஆகியன குறித்து  வள்ளுவர் அறிவுறுத்தியவை விளக்கப்படுகிறது.  இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. திருவாசகத்தே ‘‘நமச் சிவாய வா அழ்க ’’ என்ற அகவல் பாவின் ஆய்வு  (தொடர்ச்சி ...)
- வே. மு. சீனிவாச முதலியார்
[மாணிக்கவாசகர்  அருளிய திருவாசகத்தின்  "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்ற பாடல் 'அகவற்பா' வகையில் (கலிவெண்பா அல்ல)  அடங்கும் எனக் குறிப்பிட்டு இப்பாடலின் சரியான பொருளைக் காணும் ஆய்வினைத் தொடருகிறார்  வே. மு. சீனிவாச முதலியார் . இந்த ஆய்வுக்கட்டுரை  ஒரு தொடர் கட்டுரை.]

7. தமிழ்ச் செய்திகள் - இதழாசிரியர்
[ஜெர்மனியின் பெர்லின் நகரில், இந்து மாணவர் கழகத்தாரால்,  மே 10, 1937 அன்று திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது. பெர்லின் பல்கலைக்கழக சொற்பொழிவாளர் Dr. H. Beythan என்பார் 'தமிழ் இலக்கியத்தில் முற்றோற்றம்' என்ற திருக்குறள் குறித்த  உரையை வழங்கினார்.
(German missionary Dr. Hermann Beythan ஒரு தமிழ் இலக்கண  நூலும் வெளியிட்டுள்ளார், ஜெர்மானிய வானொலியின் முதல் தமிழ் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்ட பொழுது அறிவிப்பாளராகவும் பொறுப்பேற்றிருந்தார் என்பது இணையத்தில் பெற்ற  தகவல் -
http://rs5hiland.blogspot.com/2015_06_01_archive.html 
http://madrasmusings.com/Vol%2018%20No%2026/tamil-studies-in-germany.html;
Hermann Beythan (known in India as Peytan Castiriyar, who closely worked with the noted Tamil scholar Me.Vi. Venuko pala Pillai in Madras). He was a lecturer at the Institut Fuer Auslandskunde in Berlin and author of a detailed grammar of Tamil published in 1943 at the height of World War II.). ]

8. நூல் மதிப்புரை -  இதழாசிரியர்
[தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், இராவ்சாகிப்  V.P. சுப்பிரமணி முதலியார் அவர்கள் உரை எழுதிய, 'கம்பராமாயண சாரம்:  அயோத்தியா காண்டம்'  நூலை வெளியிட்டது பாராட்டப் படுகிறது.]

________________________________________________

No comments:

Post a Comment