Wednesday, August 3, 2016

தமிழ்ப் பொழில் (1936-1937) துணர்: 12 - மலர்: 3

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937) துணர்: 12 - மலர்: 3
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்):  இராவ்சாகிப்  திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
________________________________________________________________

பன்னிரெண்டாம் ஆண்டு: (1936-1937)
துணர்: 12 - மலர்: 3

_________________________________________________________

1.  கருதலளவைப் பகுதி (தொடர்ச்சி ...)
த. இராமநாத பிள்ளை
[4 ஆம்  அதிகாரம்:  கட்டுரையின் இப்பகுதி, அப்பியாசங்கள், வழியளவை  ஆகிய கருத்தாக்கங்களை விளக்குகிறது.  இது ஒரு தொடர் கட்டுரை]

2. இந்தியாவும் சீனாவும்  (தொடர்ச்சி ...)
T.S. நடராசன்
[சீனப் பேராசிரியர் 'டான்-யுன்-ஷன்'   சாந்திநிகேதனத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு- பண்டைய  காலம் தொட்டு சீனாவும் இந்தியாவும் கல்வி, மொழி ஆகியவற்றில் மேம்பட்டு உலகில் சிறந்து விளங்கியமை பற்றியும்; இரு நாடுகளின் பெளத்த மத நூல்கள் மற்ற  நாட்டைப் பற்றி குறிப்பிடுவதைப் பற்றியும்; வாழ்வியல் , மக்கள் கொண்ட நல்லொழுக்கப் பண்புகளின் ஒற்றுமை, கலைவளர்ச்சி, நாகரிகம் எனப் பலவற்றிலும்   தொடர்ந்து 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளும்  சிறந்து விளங்குவது பற்றியும்  விவரிக்கிறது.

டான்-யுன்-ஷன்  அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் போர்வெறி மனநிலை, நவீன ஆயுதங்கள் தயாரிக்கும்  போக்கு ஆகியவற்றைப் பற்றிக் கவலை தெரிவிக்கிறார் (இவர் கவலையை உறுதிப்படுத்தும் வகையில் இவர் உரையாற்றிய இரண்டாண்டுகளில் 2 ஆம் உலகப்போர் துவங்கி, அணுஆயுதம் அழிவு வேலையைக் காட்டியது இங்குக் குறிப்பிடத்தக்கது) இக்கட்டுரை நிறைவுறுகிறது]

3. 'பரணர்' மறுப்பின் ஆராய்ச்சி
ஐ. நடேசப்பிள்ளை
[சென்னைப் பல்கலைக் கழக விரிவுரையாளரும், பன்மொழி அறிஞருமான வே. வேங்கடராஜுலு ரெட்டியார் எழுதிய 'பரணர் என்னும் ஆராய்ச்சி நூல்' மீது நூல் மதிப்புரை  எழுதினார் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை (பார்க்க துணர் 11: மலர் 9).  இக்கட்டுரையில் ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் வைத்த விமர்சனங்களுக்கு விளக்கமளித்துள்ளார் ஐ. நடேசப்பிள்ளை]

4. பண்டைத் தமிழர் மணமுறை
மா. இராசமாணிக்கனார்
[பண்டைத் தமிழர் மணமுறை , தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் உண்டா என்பது குறித்து இலக்கியத்தில் ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்தவர் மா. இராசமாணிக்கனார். 1950  களில் தமிழ் இலக்கிய உலகமே  மா. இராசமாணிக்கனார், சிலம்புச் செல்வர் ம பொ சி ஆகிய இருவரின் பின்னணியில் இரண்டுபட்டு எதிரெதிர் அணியில் பண்டைத் தமிழர் மணமுறை குறித்து விவாதித்தனர். பிறகு இந்த விவாதங்கள் நூலாகவும்  வெளியிடப்பட்டன என்பது  தமிழகத்தில் நிகழ்ந்த   ஒரு  சுவையான வரலாற்று நிகழ்வு.  இந்த நிகழ்வுக்கும் முன்னரே 1936இல்  மா. இராசமாணிக்கனார் எழுதிய கட்டுரை இது.  பண்டைத் தமிழர் மணமுறை  குறித்து இக்கட்டுரையில் பல இலக்கியச் சான்றுகளைத் தருகிறார் மா. இராசமாணிக்கனார்]

5. பாண்டியர் வரலாறு  (தொடர்ச்சி...)
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[இம்முறை, கிபி 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல், 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை தென்பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்த பிற்காலப் பாண்டியர்களின் வரலாற்றுத் தகவல்களை, அவர்களது  கல்வெட்டுகள், சாசனங்கள் தரும் குறிப்புகளுடன் விளக்குகிறார் சதாசிவப் பண்டாரத்தார்.  இவர்களில் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் சிறந்த மன்னனாக விளங்கினான் என்றும், சிறந்த தமிழ் அறிஞனாகவும் விளங்கினான் என்றும் கூறுகிறார்.  அதற்கு இம்மன்னன் அவன்  கட்டிய திருநெல்வேலி மாவட்டம், தென்காசி, விசுவநாத சுவாமிக் கோவிலின், முன்புறம் இடிந்துள்ள கோபுரச் சுவரில் எழுதி வைத்த  சாசனச் செய்யுள்களைசான்று தருகிறார். (இச்செய்யுள்களைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் -  மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் நூலான "தமிழக ஆவணங்கள்" சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள், மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 14  இல் [http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=303&pno=123]படிக்கலாம்). 

அடுத்து,    சடையவர்மன் பராக்கிரம பாண்டியனின் இளவல் சடையவர்மன் குலசேகரப் பாண்டியன், அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன், அபிராம பராக்கிரம பாண்டியன், ஆகாரவர்மன், சடையவர்மன் சீவல்லப பாண்டியன், சடையவர்மன் பராக்கிரம குலசேகர பாண்டியன், நெல்வேலிமாறன், சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் (நைடதம் நூல் எழுதிய அரசன்), வரதுங்க ராம பாண்டியன்  ஆகியோர் பற்றிய செய்திகளைத் தருகிறார் ஆசிரியர். இப்பாண்டியர்களில்  சிலர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும், சிவபக்தர்களாகவும், சிவனுக்குக் கோவில் எழுப்பியவர்களாகவும் அறியப்படுகிறார்கள். இக்கட்டுரை ஒரு தொடர் கட்டுரை]

6. திருவாதவூரார் திருவாய்மொழி
வி. குமாரசாமி ஐயர்
[அறம், பொருள், இன்பம், வீடு பேறு குறித்து தமிழிலக்கியங்கள் கூறுகின்றன. குறிப்பாக முதல் மூன்றும் மும்முதற் பொருளாகக் கருதுவது தமிழிலக்கிய மரபு.  இக்கருத்துக்கள் திருவாதவூரடிகள் எழுதிய திருவாசகம், திருக்கோவையார் நூல்களில் எங்ஙனம் கையாளப்படுகிறது என ஆராய்கிறார் குமாரசாமி ஐயர்.  இது ஒரு தொடர் கட்டுரை]

7. புத்தக மதிப்புரை
இதழாசிரியர்
[அனந்த கிருஷ்ணையங்கார் எழுதிய 'தனிப்பா மஞ்சரி' ஆசிரியர் புலவர் காளமேகம் போன்ற திறமை கொண்ட ஒரு  புலவர் எனக் காட்டுகிறது என்றும்; 
சிவானந்தையர் எழுதிய 'புலியூர்ப் புராணம்' சிறந்த பொருள் நயம், சொல் நயம் கொண்ட பாடல்களைக் கொண்டது எனவும் பாராட்டப்படுகிறது. இந்த நூலை நிறைவு செய்யாமல் சிவானந்தையர் மறைந்துவிட்டாலும், தனது கணவரின் நினைவு மலராக வெளிக்கொணர உதவிய அவரது மனைவியும்  பதிப்பித்த தம்பையாப்பிள்ளையும் பாராட்டப் பட்டுள்ளார்கள்]

8. கரந்தைத் தமிழ்ச் சங்கம் கல்லூரிக்கு அன்பர்கள்  உதவிய மாதாந்திர நன்கொடை விவரம்


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்



வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment